சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்ட ஈரானியப் பெண்ணும் அவரது மலேசியக் கணவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் அவ்விருவரும் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.
அமைச்சு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“பர்வானே ஹெய்தரிதேகோர்டி, 38, என்னும் அந்தப் பெண்ணின் நீண்டகால வருகை அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் அவரது கணவர் சூ தியென் லிங், 65, என்பவரின் நிரந்தரவாசத் தகுதி மீட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
பயங்கரவாதம் தொடர்புடைய வெளிநாட்டினர் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான விசா விண்ணப்பங்களுக்கு ஆதரவு வழங்கும், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட பயண நிறுவனம் ஒன்றின் நடவடிக்கைகளில் பர்வானே ஈடுபட்டார் என்று உள்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.
வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் நடவடிக்கைகளின் பின்னணியில் அந்தப் பயண நிறுவனம் இருந்தது புலன்விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து அதன் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
“அந்நிறுவனம் தொடர்பாக அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியதும், பயணத் தொழில் நடத்தும் நிறுவனம் ஒன்றை சிங்கப்பூரில் பதிவு செய்ய சூ இருமுறை முயன்றார். அந்த வர்த்தகத்தை தமது மனைவி பர்வானே நடத்த வேண்டும் என்பது சூவின் நோக்கம்.
“பயங்கரவாதம் தொடர்பான நபர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதை ஆதரிக்கும் நடவடிக்கைகளை பர்வானே தொடர அந்தச் செயல் எளிதாக்குவதைப் போலத் தோன்றியது,” என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.