வர்த்தகப் போர் சூழலில் சிங்கப்பூரின் வளர்ச்சி மதிப்பீடு 0% - 2% என குறைப்பு

வர்த்தகப் போர் சூழலில் சிங்கப்பூரின் வளர்ச்சி மதிப்பீடு 0% - 2% என குறைப்பு

2 mins read
1b4b9630-896b-4943-9e21-5180c4394a32
வளர்ச்சி விகிதம் 1 விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கக்கூடும் என்று இதற்கு முன்னர் கணிக்கப்பட்டு இருந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வர்த்தக, தொழில் அமைச்சு இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் வளர்ச்சி 0.0 விழுக்காட்டுக்கும் 2.0 விழுக்காட்டுக்கும் இடையிலேயே இருக்கும் என்று முன்னுரைத்து உள்ளது.

புதிய வரி விதிப்பால் அமெரிக்கா, சீனா இடையில் நிகழும் வர்த்தகப் போர் உலகப் பொருளியலை மெதுவடையச் செய்யும் சாத்தியம் இருப்பதால், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதத்தை அமைச்சு கீழ்நோக்கித் திருத்தி உள்ளது.

அந்த வளர்ச்சி விகிதம் 1 விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கக்கூடும் என்று இதற்கு முன்னர் கணிக்கப்பட்டு இருந்தது.

சிங்கப்பூருக்கான வெளிப்புறத் தேவை நிலவரம் ஆண்டின் எஞ்சிய பகுதியில் கணிசமாக பலவீனமடைந்து உள்ளதாகத் தான் கருதுவதாக அமைச்சு திங்கட்கிழமை (ஏப்ரல் 14) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

“பலவீனமான நிலவரம் வெறியுலகைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூரின் துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, பலவீனமான உலகத் தேவையால் சிங்கப்பூரின் உற்பத்தித் துறை பாதிப்பைச் சந்திக்கும் நிலை உள்ளது

“உலக வர்த்தகம் மெதுவடையும் சூழலில், வர்த்தகத்தின் மொத்த விற்பனைத் துறையும் அதிலிருந்து தப்பாது. அதன் வளர்ச்சியும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.

“உலகளாவிய வர்த்தகத்தின் பின்னடைவு சிங்கப்பூரின் போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குத் துறைகளின் வளர்ச்சியிலும் பிரதிபலிக்கக்கூடும்.

“அது ஆகாயம், கடல் வழிகளிலான சரக்குப் போக்குவரத்துச் சேவைகளுக்கான தேவையைக் குறைக்கக்கூடும்

“அதேநேரம், வங்கிகள், நிதி நிர்வாகங்கள், வெளிநாட்டு நாணய நிலையங்கள், பங்கு வர்த்தகம் போன்றவற்றிற்கு வரவேண்டிய கட்டணம், தரவுத்தொகை போன்றவை மோசமாகப் பாதிக்கப்படலாம்ம். அதன் விளைவாக நிதி மற்றும் காப்பீட்டுத் துறைகளின் வர்த்தகம் பலவீனமடையக்கூடும்,” என்றும் அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆண்டு அடிப்படையிலான சிங்கப்பூரின் வளர்ச்சி இவ்வாண்டின் முதல் காலாண்டில் 3.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அது எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான விகிதம்.

அந்த விகிதம் 4.7 விழுக்காடாக இருக்கும் என்று புளூம்பெர்க் ஆய்வில் பங்கேற்ற பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்து இருந்தனர். காலாண்டுக்கு அடிப்படையிலான வளர்ச்சி விகிதம் 0.3 விழுக்காடாக இருக்கும் என்றும் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிடப்பட்ட அதன் ஆய்வறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்