அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அமெரிக்க அரசாங்கத் துறையிடமும் அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பிடமும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மீது விதிக்கப்பட்டத் தடை குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை ரத்து செய்தார்.
இதனால் அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்ற கவலை எழுந்தது. இது சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாட்டு மாணவர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
இதையடுத்து சிங்கப்பூர் மாணவர்களுக்கு உதவும் விதமாக அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தங்களது கேள்விகளுக்கு இன்னும் ஒரு சில நாள்களில் அமெரிக்க அதிகாரிகள் தகுந்த விளக்கம் கொடுப்பார்கள் என்று சிங்கப்பூர் தூரதகம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் படிக்க விரும்பும் சிங்கப்பூர் மாணவர்களின் விசாக்கள் தயாராகக் கூடுதல் நேரம் எடுக்குமா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சனிக்கிழமை (ஜூன் 7) தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு ஐந்து நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள திரு விவியன் தமது பயணத்தின் கடைசி நாளான சனிக்கிழமை ஹார்வர்ட் விசா தடைகுறித்து சிங்கப்பூர் ஊடகங்களிடம் இணையம் வழி பேசினார்.
ஒருவேளை சிங்கப்பூர் மாணவர்களுக்கு விசா பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு மாற்று ஏற்பாடு என்ன என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று ஒரு சில யோசனைகள் உள்ளதாகவும் டாக்டர் விவியன் கூறினார்.
இன்னும் அமெரிக்காவுக்குச் செல்லாத மாணவர்கள் வேறு திட்டங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 151 சிங்கப்பூரர்கள் படித்து வருகின்றனர்.