சிங்கப்பூரில் 2025 முதலாம் காலாண்டில் வேலைவாய்ப்பு நிலவரம் சாதகமாக இருக்கும் என்றபோதிலும் ஓராண்டுடன் ஒப்பிடுகையில் சற்று பலவீனமாகக் காணப்படும்.
‘மேன்பவர்குரூப்’ (ManpowerGroup) என்னும் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
உலகளாவிய தேவை அதிகமாக உள்ளதால் போக்குவரத்து, தளவாடம் மற்றும் வாகனத் துறைகளில் வேலைகள் இருக்கும். அவற்றை நிரப்ப, புத்தாண்டில் மிகவும் கவனத்துடன் செயல்பட இருப்பதாக ஆய்வில் பங்கேற்ற முதலாளிகள் தெரிவித்து உள்ளனர்.
அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 525 முதலாளிகள் பங்கேற்றனர். அவர்களில் 45 விழுக்காட்டினர் அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வேலைக்கு ஆட்களை நியமிக்க இருப்பதாகக் கூறினர்.
அதேவேளை, ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக 20 விழுக்காட்டு முதலாளிகள் தெரிவித்தனர்.
ஊழியர்களைப் பொறுத்தவரை எந்தவொரு மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை என்று 34 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.
ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு நிலவரம் முதல் காலாண்டில் 25 விழுக்காடாக இருக்கும் என்று ஆய்வில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேன்பவர்குரூப் கூறியுள்ளது.
இது முந்திய காலாண்டைவிட 4 விழுக்காடு குறைவு. ஓராண்டோடு ஒப்பிடும்போதும் அந்த விகிதம் சற்று குறைவுதான்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சற்று முன்னதாக, அக்டோபர் மாதம் ஆய்வு நடத்தப்பட்டிருப்பதால், அடுத்த ஆண்டின் வேலைவாய்ப்பு விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கப்போவதாக முதலாளிகள் கூறியதாக மேன்பவர்குரூப் நிறுவனத்தின் சிங்கப்பூர் மேலாளர் லிண்டா டியோ தெரிவித்துள்ளார்.
ஆய்வில் பங்கேற்ற ஒன்பது துறைகளில் எட்டின் முதலாளிகள் வேலை நியமன எண்ணிக்கை அதிகரிப்பை எதிர்பார்ப்பதாகக் கூறினர்.
எரிசக்தித் துறை மட்டும் எதிர்மறைப்போக்கில் உள்ளது.
இதற்கிடையே, சுகாதாரப் பராமரிப்பு, வாழ்க்கை விஞ்ஞானம், நிதி மற்றும் சொத்துச் சந்தை, பயனீட்டாளர் பொருள் மற்றும் சேவை போன்றவற்றின் வேலைவாய்ப்பு நிலவரம் 30 விழுக்காடு வலுவான வளர்ச்சியை உணர்த்துவதாக திங்கட்கிழமை (டிசம்பர் 9) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை குறிப்பிட்டது.