வளர்ச்சி வாய்ப்புகளைப் கைப்பற்ற நிறுவனங்கள் துணிந்து முடிவெடுக்க வேண்டும்

வளர்ச்சி வாய்ப்புகளைப் கைப்பற்ற நிறுவனங்கள் துணிந்து முடிவெடுக்க வேண்டும்

2 mins read
e7d3bc08-d018-4f93-9391-3dfad3515d53
இடமிருந்து: பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற தற்காலிக போக்குவரத்து அமைச்சரும் நிதிக்கான மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ், துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங். - படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

மாறிவரும் உலகில் புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பெறுவதற்கான உத்தியின் ஒரு பகுதியாக உள்ளூர் நிறுவனங்கள் துணிந்து முடிவெடுப்பதற்கு முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை (ஜனவரி 29) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட பொருளியல் உத்தி மதிப்பீடுகள் சார்ந்த  இடைக்கால அறிக்கையின்படி (இஎஸ்ஆர்) புதிய நிறுவனங்கள் உள்பட சிங்கப்பூர் நிறுவனங்களுக்கான கூடுதல் ஆதரவும் கோரப்பட்டது.

அதன்படி, மேம்பட்ட உற்பத்தி, நவீன சேவைகள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் சிங்கப்பூரை முன்னிலைப்படுத்த உதவும் புதிய நிறுவனங்கள் உள்ளிட்ட இதர நிறுவனங்கள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப துணிந்து முடிவுகளை எடுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய வளர்ச்சித் துறைகளில் சிங்கப்பூரின் உலகளாவிய தலைமையை நிலைநாட்டவும், விரிவுபடுத்தவும் முயலும் நிறுவனங்களுக்கான அரசாங்க ஆதரவு குறித்தும் ‘இஎஸ்ஆர்’ அறிக்கை குறிப்பிட்டது.

அவ்வகையில் உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் பெரிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்க ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்பதும் ‘இஎஸ்ஆர்’ குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளில் இடம்பிடித்திருந்தன.

இது குறித்து கருத்துரைத்த துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், அனைத்துலக நிறுவனங்களிடமிருந்து பெரிய முதலீடுகளை ஈர்ப்பதில் சிங்கப்பூர் தொடர்ந்து கவனம் செலுத்தும். அதே வேளையில், வளர்ந்து வரும் உலகளாவிய நிறுவனங்கள் மீதும் தனது கவனத்தை அதிகரிக்கும் என்று கூறினார். 

கடந்த காலத்தில், வெற்றிகரமான சாதனைகளைப் பதிவு செய்யாத நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு சிங்கப்பூர் தயக்கம் காட்டியதாக சுட்டிய திரு கான், “நீங்கள் வெற்றி பெறுவீர்களா? இல்லையா என்று எங்களுக்குத் தெரியாததால், அக்காலங்களில் நீங்கள் வெற்றிபெறும் வரை காத்திருக்கவும் என்று நாங்கள் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்போது, சிங்கப்பூர் அந்த அணுகுமுறையை மாற்ற வேண்டும்,’’ என்று கூறினார்.

சிங்கப்பூரின் முதலீட்டு மேம்பாட்டு உத்தியில் இது ஒரு அடிப்படை மாற்றமாக இருக்கும் என்றும் துணைப் பிரதமர் கான் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே இது குறித்து கருத்துரைத்த தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், உலக நாடுகளுடனான சிங்கப்பூரின் இணைப்பை மேலும் விரிவாக்கும் உத்தியுடன் சேர்ந்து, இத்தகைய அபாயங்களைத் துணிவுடன் எதிர்கொள்ளும் அணுகுமுறையும் இடம்பெறும் என்றும் கூறினார்.

நிதிக்கான மூத்த துணை அமைச்சருமான அவர், சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அனைத்துலக அளவில் தடம் பதிக்க இன்னும் தீவிரமாக ஆதரவளிக்க முடியும்  என்று தாம் கருதுவதாகவும் கூறினார்.

எனினும் அது எளிதான காரியமாக இருக்காது என்று குறிப்பிட்ட திரு சியாவ், ‘‘வெளிநாட்டுச் சந்தைகள் கடினமாக இருக்கும். அவை அதிக பாதுகாப்புக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. பல நாடுகள் தங்களுக்கெனத் தனிப்பட்ட தொழில்முறை கொள்கைகளை வகுத்து வருவதால், உள்ளூர் நிறுவனங்கள் அங்கு போட்டியிடுவது மிகவும் கடினம்.

‘‘எனினும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், துணிந்து முடிவுகளை எடுப்பதற்கும், பெரிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது,’’ என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு சியாவ்.

குறிப்புச் சொற்கள்