வர்த்தக மையம் என்ற நிலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்

வர்த்தக மையம் என்ற நிலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்

2 mins read
ddd1786d-11cd-4b68-b839-17c7e7e2b212
சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரம். படம்: கோப்புப் படம் -

வர்த்தக மையம் என்ற தன் தகுதியைத் தக்கவைத்துக்கொள்ளுதல், உலகத்துடன் தொடர்ந்து இணைந்திருத்தல் ஆகிய இரண்டையும் இலக்காகக் கொண்டு சிங்கப்பூர் மீண்டும் அதன் எல்லைகளைத் திறக்கிறது என்றார் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்.

அதே சமயம் நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூர் மேலும் எச்சரிக்கையான ஓர் அணுகுமுறையைக் கையாண்டுள்ளதாக 'பிபிசி'க்கு இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) அளித்த பேட்டியின்போது அவர் தெரிவித்தார்.

"திறனாளர்கள், முதலீடுகள் இரண்டையும் நாங்கள் தொடர்ந்து வரவேற்கிறோம், வரவேற்போம். ஏனெனில், சிங்கப்பூர் நிலைத்திருப்பதற்கும் ஒரு நாடாக அது முன்னேறுவதற்கும் இரு அம்சங்களும் மிக முக்கியம்," என்றார் அவர்.

தனிமை உத்தரவு இன்றி அடுத்த மாதம் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளை ஜெர்மனி, புருணையிலிருந்து அனுமதிக்கவுள்ளதாக சிங்கப்பூர் நேற்று அறிவித்தது. ஹாங்காங், மக்காவ் இடங்களிலிருந்து வரும் பயணிகளுக்கும் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. கொவிட்-19 சூழலிலும் மீள்திறன்மிக்க நாடாக சிங்கப்பூர் உருவெடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.

தமது 'பிபிசி' பேட்டி குறித்து திரு வோங் ஃபேஸ்புக்கில், "இங்கு நல்ல ஆளுமை இருப்பதை வர்த்தகங்கள் உணர்கின்றன. அத்துடன் சவால்களைச் சமாளிக்க நாம் ஒன்று திரளும்போது வலுவான சமூக ஒருமைப்பாடும் உணரப்படுகிறது.

தொடர்ந்து நம் கொள்கைகளில் மாற்றம் செய்வோம், உலகமயமாவதில் பொதுமக்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவோம், சமூக இணக்கத்தை வலுவாக்குவோம். அத்துடன் திறந்த, துடிப்பான பொருளியலுக்கான ஆதரவை பலப்படுத்துவோம்," என்று பதிவிட்டிருந்தார்.

நியூயார்க், லண்டன் போன்றவை அல்ல சிங்கப்பூர். ஆயிரக்கணக்கில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானாலும் வழக்கம்போல் வியாபாரத்தைத் தொடர்ந்தன இந்நகரங்கள் என்றார் 'பிபிசி'யின் மூத்த செய்தியாளர் கேட்டி சில்வரிடம் திரு வோங்.

இயல்புநிலைக்குத் திரும்ப விரும்பினாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பதை உறுதிசெய்வதில் சிங்கப்பூர் கவனம் செலுத்தியது என்றார்.

"இப்போது உலகிலேயே ஆக அதிகமான தடுப்பூசி விகிதத்தைப் பெற்ற நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இன்னும் சில வாரங்களில் 82% தங்களின் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருப்பர்.

"இது குறிப்பிடத்தக்க ஒரு சாதனை. இத்தகைய தடுப்பூசி விகிதத்தால் கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவானாலும் நாங்கள் நம்பிக்கையுடன் இருப்போம்," என்றார்.