சிங்கப்பூர் அதன் பகுதி மின்கடத்தித் துறையில் உள்ள வர்த்தகப் பங்காளிகளுடனான உறவை தொடர்ந்து வலுப்படுத்தும் அதேநேரம் உலகளாவிய புதிய பங்காளிகளுடன் உறவை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தும்.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இதனைத் தெரிவித்து உள்ளார்.
தென்கிழக்கு ஆசிய பகுதிமின்கடத்தி மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய அவர், உலக வர்த்தக நெருக்கடி நிலவும் சூழலில் புதிய வர்த்தகக் கூட்டணிகளை உருவாக்குவதன் மூலம் புதிய விநியோகத் தொடர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நிறைந்த சந்தைகளை எளிதாக அணுக இயலும் என்றார்.
பகுதிமின்கடத்தித் துறையினருக்கான அந்த உலகளாவிய மாநாடு மற்றும் கண்காட்சி இம்முறை சிங்கப்பூரில் நடத்தப்படுகிறது.
புத்தாக்கத்தையும் ஊழியரணியின் மேம்பாட்டையும் விரைவுபடுத்த பகுதிமின்கடத்தித் துறையினருடன் சிங்கப்பூர் அணுக்கமாகப் பணியாற்றும் என்றும் டாக்டர் டான் கூறினார்.
“அந்தத் துறை தற்போது வர்த்தகப் பதற்றங்களாலும் புவிசார் அரசியல் பதற்றங்களாலும் சவால் நிறைந்த செயலாக்கச் சூழலை எதிர்நோக்குகிறது.
“எனவே, அந்தத் துறையின் வளர்ச்சிக்கு வலுவான முயற்சிகள் தேவைப்படுகின்றன.
“உலக வர்த்தகச் சூறாவளியின் பார்வையில் பகுதி மின்கடத்தித் துறை பட்டுள்ளது. அதனால், தங்களது உற்பத்திக்கான தேவையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த நிச்சயமற்ற போக்கால் நிறுவனங்களிடையே அது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களுக்கான விநியோகத்திலும் இடையூறுகள் நேரக்கூடும் என்ற பதற்றமும் அவற்றிடம் காணப்படுகிறது. சில நிறுவனங்கள் தங்களது அந்தத் துறைக்கான முதலீடுகளை நிறுத்தி வைத்துள்ளன.
இத்தகையச் சூழலில் தடையற்ற வர்த்தகத்திற்கான கடப்பாடுகளை பகிர்ந்துகொள்ளும் நாடுகளுடன் சிங்கப்பூர் உறவை ஏற்படுத்தும்.
அத்துடன், பகுதிமின்கடத்தி நன்மதிப்புத் தொடரில் உள்ள அம்சங்களுடன், இருதரப்பு ரீதியிலோ வட்டாரத் தளங்களின் வாயிலாகவோ சிங்கப்பூர் தொடர்ந்து ஒத்துழைக்கும்.
அத்தகைய முயற்சிகள், பகுதி மின்கடத்தித் துறைக்கான வலுவான பொருளியல் பலன்களை அளிக்க நமக்கு நன்றாக உதவும்,” என்றார் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டாக்டர் டான்.

