சிங்கப்பூரின் மரபணு பண்புக் காரணித் தொகுப்பின் ஆய்வுத் திட்டம் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுப்பதில் உதவி இருப்பது தெரிய வந்து உள்ளது.
மருந்து மூலம் மோசமாகச் செயல்படும் குறைந்தபட்சம் ஒரு குறைபாடுள்ள மரபணுவை பெரும்பாலான சிங்கப்பூரர்கள் பெற்றிருப்பதை 2022ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
10,000 சிங்கப்பூரர்களின் மரபணுக்களைத் திரட்டித் தொகுத்ததில் அந்த விவரம் தெரிய வந்தது.
மக்கள்தொகையில் 99 விழுக்காட்டுக்கும் அதிகமானோரிடம் அத்தகைய குறைபாடுள்ள மரபணுத் திரிபு இருந்ததை விஞ்ஞானிகள் கண்டனர்.
அதிலும், நான்கில் ஒரு சிங்கப்பூரர் உயிருக்கு ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் திரிபுகளுடன் இருப்பதும் அப்போது தெரிய வந்தது.
மருந்தின் மோசமான பக்கவிளைவுகளுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 விழுக்காட்டினரின் பக்கவிளைவுகள் முன்கூட்டி தடுக்கப்படக்கூடியவை என்பதை 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்தது.
பக்கவிளைவுகள் மூலம் உடல்நலம் பாதிக்கப்படுவதில் இருந்து நோயாளிகளைத் தடுக்க, மோசமான எதிர்வினைக்கு வழிவகுக்கும் மரபணுக்களின் தொகுப்பை பரிசோதிக்கும் செயல்முறையை மூன்று ஆராய்ச்சியாளர்கள் வகுத்தனர்.
மரபணுத் தகவல் எவ்வாறு நோயாளி பராமரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் உதவுகிறது என்பதற்கு இரு ஓர் உதாரணம் என்று எடுத்துக்கொள்ளும் அதேநேரம், சிலருக்கு மோசமான பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுக்கிறது என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்து உள்ளார்.

