பாரிசான் சோஷலிஸ்ட் கட்சி உயிர்ப்புடன் இருப்பதை நிரூபிக்க வேண்டும்

2 mins read
39d1f0ce-73aa-48de-a233-46dc138f25be
1961ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பாரிசான் சோஷலிஷ்ட் கட்சி 13 முன்னாள் மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாரிசான் சோஷலிஸ்ட் கட்சி உட்பட 14 கட்சிகள் தாங்கள் உயிர்ப்புடன் செயல்படுகின்றனவா என்பதை நிரூபிக்கக் கோரி அவற்றுக்கு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதன் தொடர்பில் கடந்த (வியாழக்கிழமை) ஆகஸ்ட் 7ஆம் தேதியிட்ட அரசிதழில் சங்கங்களுக்கான துணைப் பதிவு அதிகாரி அந்தக் கட்சிகள் செயல்படாத நிலையில் இருப்பதாக நம்புவதற்குக் காரணம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கட்சிகள் தாங்கள் செயல்படுவதாக மூன்று மாதங்களுக்குள் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.

இல்லையேல், சங்கப் பதிவாளர் அவை செயல்பாட்டில் இல்லை என அரசிதழில் அறிவித்து விடுவார் என்று அந்தக் கட்சிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியக் கட்சியாக இருக்கும் பாரிசான் சோஷலிஸ்ட் கட்சி, 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்டது.

அந்தக் கட்சி மக்கள் செயல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 13 சட்டமன்ற உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

அந்தக் கட்சியின் தலைவர் லிம் சின் சியோங் உட்பட பல இடதுசாரி, கம்யூனிசச் சித்தாந்த சார்பு உறுப்பினர்கள் 1963ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தடுத்து வைக்கப்பட்டனர்.

‘ஆபரேஷன் கோல்ட்ஸ்டோர்’ எனப் பெயரிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்கீழ் அவர்கள் மீது அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், அதே 1963ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 46 தொகுதிகளில் 13 தொகுதிகளை வென்றது.

பின்னர், 1965ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக சிங்கப்பூர் உருவெடுத்தபோது சிங்கப்பூரின் சுதந்திரம் போலியானது எனக் கூறி நாடாளுமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கையை அக்கட்சி மேற்கொண்டது.

மீண்டும் 1972ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பாரிசான் சோஷலிஸ்ட் கட்சி எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

பின்னர், 1984ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் போட்டியிட்ட அக்கட்சி, நான்காண்டுகளுக்குப் பின்னர் 1988ஆம் ஆண்டு பாட்டாளிக் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்