120 கி.மீ. தூர தென் கரையோரம்; நிக்கல், மரினா ஈஸ்ட்டில் புதிய வீடுகள்

2 mins read
072c132d-88f7-4629-a95c-385cd16252b0
சிங்கப்பூரின் தென் கரையோரப் பகுதியில் இறுதியாக பரந்த தென் நீர்முகப்பு, மரினா பே, காலாங் பேசின், வருங்கால ‘லாங் ஐலண்ட்’ திட்டம் ஆகியன இடம்பெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் அதன் தென் கரையோரப் பகுதியை மறுஉருவாக்கம் செய்யவுள்ளது. பாசிர் பாஞ்சாங் முனையத்திலிருந்து தானா மேரா படகு முனையம் வரை 120 கிலோமீட்டர் தூரம் நீளும் நீர்முகப்புப் பகுதி, வருங்கால நகரைக் கட்டியமைக்க பல சாத்தியங்களை வழங்கும் எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

இந்த உருமாற்றத்தின் ஒரு பகுதியாக, நகருக்கு அருகே நீர்முகப்புப் பகுதிக்கு மரினா ஈஸ்ட்டிலும் நிக்கலிலும் புதிய வீடுகள் கட்டப்படும். மரினா பேக்கும் சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்திற்கும் இடையே காலாங்கில் இப்பகுதி அமைந்துள்ளது.

சிங்கப்பூரின் தென் கரையோரப் பகுதியில் இறுதியாக பரந்த தென் நீர்முகப்பு, மரினா பே, காலாங் பேசின், வருங்கால ‘லாங் ஐலண்ட்’ திட்டம் ஆகியன இடம்பெறும். இத்திட்டம், ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே 800 ஹெக்டர் பரப்பளவிலான நில மீட்புப் பகுதியை உருவாக்கும்.

1965ல் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற உடனே, நில மீட்பு செய்து மரினா பேயை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தொடங்கி நிறைவேற்ற எவ்வளவு காலம் ஆனதோ, அதேபோல பெரிய அளவிலான இந்தத் திட்டங்கள் நிறைவேற பல பத்தாண்டுகளாகும் எனப் பிரதமர் வோங் கூறினார்.

“இப்போது தொடங்கி, வருங்காலத்தில் மேம்பட்ட சிங்கப்பூருக்கான அடித்தளத்தை நாம் அமைக்கலாம்,” என்றார் அவர்.

செந்தோசா, பிரானித் தீவுகளின் நீர்முகப்புகளையும் உள்ளடக்கும் அந்த 120 கி.மீ. கரையோரப் பகுதி, நீர்முகப்புப் பகுதிகள் மற்றும் பூங்காக்கள் மூலம் சென்றடைவதற்கான வசதி ஏற்படுத்தப்படும் என நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

நகர மையப்பகுதியை மறுஉருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்து பேசிய பிரதமர் வோங், மரினா பே, மரினா சேனல், காலாங் பேசின் ஆகிய மூன்று நீர்ப்பகுதிகளும் நகரின் மையப்பகுதியில் தொடர் நீர்முகப்பை அமைப்பதைச் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்