சிங்கப்பூரில் தனிநபர் அல்லது நிறுவனங்கள் பதிவு செய்யக்கூடிய 250 கிராமுக்கும் அதிகமான எடை கொண்ட ஆளில்லா வானூர்திகளின் எண்ணிக்கை தொடர்பான வரம்பு பிப்ரவரி 14ஆம் தேதியிலிருந்து நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா வானூர்தித்துறையின் மேம்பாட்டுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வான்வெளியில் ஆளில்லா வானூர்திகளை பறக்கவிடுவது தொடர்பான விதிமுறை எளிமைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
எல்லா நாள்களிலும் கூடுதல் உயரத்தில் ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்தத் தகவலைச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 31) அறிவித்தது.
பதிவு வரம்பு அகற்றப்படுவதன் மூலம் பொதுமக்கள், விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பலன் தரும் வகையில் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தலாம் என்று ஆணையம் கூறியது.
சிங்கப்பூரில் 250 கிராமுக்கும் அதிகமான ஆளில்லா வானூர்தியைப் பறக்கவிடுவதற்கு முன்பு அதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, அதிகபட்சம் ஐந்து ஆளில்லா வானூர்திகளை சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் பதவி செய்துகொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரர் அல்லாதோர், வெளிநாட்டவர்கள் ஆகியோர் ஒரே ஓர் ஆளில்லா வானூர்தியை மட்டுமே பதிவு செய்துகொள்ளலாம்.
கூடுதல் ஆளில்லா வானூர்திகளைப் பதிவு செய்துகொள்ள விரும்புவோர் ஆணையத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
2024ஆம் ஆண்டில் 2,305 பேர் தங்கள் ஆளில்லா வானூர்திகளை ஆணையத்துடன் பதிவு செய்துகொண்டனர்.
அவர்களில் 80 விழுக்காட்டினர் ஓர் ஆளில்லா வானூர்தியைப் பதிவு செய்தனர்.
11 விழுக்காட்டினர் இரண்டு ஆளில்லா வானூர்திகளைப் பதிவு செய்தனர்.
மூன்று விழுக்காட்டினர் மூன்று ஆளில்லா வானூர்திகளைப் பதிவு செய்தனர்.
இரண்டு விழுக்காட்டினர் நான்கு ஆளில்லா வானூர்திகளையும் ஒரு விழுக்காட்டினர் ஐந்து ஆளில்லா வானூர்திகளையும் பதிவு செய்தனர்.
எஞ்சிய மூன்று விழுக்காட்டினர் ஐந்துக்கும் அதிகமான ஆளில்லா வானூர்திகளைப் பதிவு செய்தனர்.
கூடுதல் ஆளில்லா வானூர்திகளைப் பதிவு செய்தவர்கள் பொதுவாக அவற்றைப் பயன்படுத்தி வர்த்தகச் சேவைகளை வழங்கியவர்கள் அல்லது ஆளில்லா வானூர்திகளைச் சுயமாக வடிவமைத்துக் கட்டிய ஆர்வலர்கள் என்று ஆணையம் கூறியது.
250 கிராமுக்கும் குறைவான ஆளில்லா வானூர்தியை ஆணையத்துடன் பதிவு செய்யத் தேவையில்லை.

