இறுதி வர்த்தக ஒப்பந்தத்தைத் தீர்மானிப்பதை சிங்கப்பூர் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது

2 mins read
இந்தோ-பசிபிக் உறுப்பு நாடுகள் குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங்
e96e40b8-d37b-469c-98da-315667cb2f6a
ஐபிஇஎஃப் பசுமைப் பொருளியல் முதலீட்டாளர் மாநாட்டில் முக்கிய உரை ஆற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வளமைக்கான இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) தொடர்பில் உறுப்பு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உறுதிசெய்துகொள்வதை சிங்கப்பூர் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக ஜூன் 6ஆம் தேதி பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

“இது உணர்வுபூர்வமான அம்சங்கள் கொண்ட சிக்கலான ஒரு விவகாரம் என்பது புரிந்துகொள்ளக்கூடியதே,” என்று சேன்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தமது முக்கிய உரையில் குறிப்பிட்டார்.

“ஆனால், இந்த வட்டார நாடுகளின் உயிர்நாடி, வர்த்தகம். அதனால், ஐபிஇஎஃப் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பரிவர்த்தனைகளையும் நம் மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்த ஒரு கணிசமான ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,” என்றார் சிங்கப்பூரின் நிதி அமைச்சராகவும் உள்ள திரு வோங்.

ஐபிஇஎஃப் 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, புருணை, ஃபிஜி, இந்தியா, இந்தோனீசியா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, அமெரிக்கா, வியட்னாம் ஆகிய நாடுகள் உள்ளன.

அனைத்துலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 விழுக்காட்டை இந்த நாடுகள் பிரதிநிதிக்கின்றன. அத்துடன் அனைத்துலக பொருள், சேவை வர்த்தகத்தில் 28 விழுக்காட்டை இவை பிரதிநிதிக்கின்றன.

ஒத்துழைப்பு, வளமை, அமைதி ஆகியவற்றை வெவ்வேறு திட்டங்களின் மூலம் வளர்ப்பதை ஐபிஇஎஃப் அதன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உறுப்பு நாடுகளுக்கிடையே நீடித்த நிலைத்தன்மை, பொருளியல் வளர்ச்சி, போட்டித்தன்மை ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.

வர்த்தகம், விநியோகச் சங்கிலி, பசுமைப் பொருளியல், நியாயமான பொருளியல் ஆகிய ஐபிஇஎஃப்பின் நான்குத் தூண்கள் அடிப்படையில் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தங்களுக்கு ஆதரவாக இந்தக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநியோகச் சங்கிலி ஒப்பந்தம் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடப்புக்கு வந்த நிலையில் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.

பசுமைப் பொருளியல், நியாயமான பொருளியல் ஆகிய ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை 2023ஆம் ஆண்டு முடிவடைந்து ஜூன் 6ஆம் தேதி அவை கையெழுத்தும் ஆகின.

இனி, இந்த ஒப்பந்தங்களை உறுதிசெய்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் ஒப்புதல் அளிப்பதிலும் ஐபிஇஎஃப் உறுப்பு நாடுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

குறிப்புச் சொற்கள்