அரசாங்கம் தலைமையிலான ஒரு பணிக்குழு, ஊழியர்கள், வணிகங்கள், பயனீட்டாளர்கள், சொத்து மேலாண்மை பணியாளர்களுக்கு உணவு, பொட்டல விநியோகங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.
அதன் பொருட்டு, போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதிக்கும் லேக் கிராண்ட் கூட்டுரிமை குடியிருப்புக்கும் சென்றனர்.
விநியோக ஊழியர்களுக்கு வசதியாக இவ்விரு வளாகங்களும் செயல்படுத்திவரும் திட்டங்களில் சிலவற்றைக் கூடுதலான குடியிருப்பு, வணிக வளாகங்களில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் சீ திங்கட்கிழமை (ஜூலை 22) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.
“விநியோக ஊழியர்கள், பாதுகாவலர்கள் உட்பட வளாக மேலாண்மை ஊழியர்கள் தங்கள் வேலைகளை பாதுகாப்பாகவும் செயல்திறனுடனும் செய்ய உதவுவதும், குடியிருப்பாளர்கள் தங்கள் பொட்டலங்களையும் உணவையும் வசதியாகப் பெறுவதும் எங்கள் நோக்கமாகும்,” என்றார் அவர்.

