வடக்கு-கிழக்குப் பாதையில் பிப்ரவரி 20ஆம் தேதி, ரயிலில் உடல்நலக்குறைவால் பயணி ஒருவர் வாந்தி எடுத்தார். அதனைக் கண்டு சற்றும் யோசிக்காமல், தமது பையிலிருந்த திசுத்தாள்களை எடுத்து சுத்தம் செய்தார் ஐசக் கோ என்ற 19 வயது இளையர்.
பாதிக்கப்பட்ட பயணி அவருக்கு நன்றி தெரிவித்தபோது, அதனை நயம்பட ஏற்றுக்கொண்ட ஐசக் , அவர் செல்லும் இடம் வரும்வரை அந்தப் பயணிக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
இந்த நெகிழ்ச்சியான காட்சியை ரயிலிலிருந்த சக பயணி ஒருவர் காணொளியாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார்.
இணையவாசிகள் பலர் ஐசக்கின் செயலைப் பாராட்டினர். நிலப் போக்குவரத்து ஆணையமும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அக்காணொளியைப் பகிர்ந்து, எவ்விதத் தயக்கமுமின்றி சக பயணிக்கு உதவிய ஐசக்கின் செயலைப் பாராட்டியது.
அவரைப் பொங்கோல் கோஸ்ட் பெருவிரைவு நிலையத்தில் நேரில் சந்தித்துப் பாராட்டுச் சான்றிதழையும் பஞ்சு போன்ற பொம்மையையும் பரிசாகப் பொதுப் போக்குவரத்து மன்றம் வழங்கியது.
அந்நிகழ்வில் கலந்துகொண்ட போக்குவரத்து துணையமைச்சர் பேய் யாம் கெங், பொதுப் போக்குவரத்தில் ஐசக்கைப் போன்ற பல கனிவுமிக்கவர்களைக் காண விரும்புவதாகத் தெரிவித்தார்.
‘கனிவுமிக்க பயணி விருது 2026’ எனும் விருதுக்கு ஐசக் தற்போது அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவ்விருதுக்கான பரிந்துரைகள் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

