தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலீட்டாளர்களை சிங்கப்பூர் தொடர்ந்து ஈர்க்க வேண்டும்: அமைச்சர் சீ ஹொங் டாட்

2 mins read
513fb73c-ecbe-40b3-a82f-bbe6dfd92b26
சிங்கப்பூரில் நடைபெற்ற யுபிஎஸ் செல்வவளக் கருத்தரங்கில் கலந்துகொண்டு நிதி இரண்டாம் அமைச்சர் சீ ஹொங் டாட் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முதலீட்டாளர்களுக்கான வட்டார மையமாக சிங்கப்பூரை உருவாக்கும் நோக்கில் முதலீட்டாளர்களை தொடர்ந்து கவரவேண்டும் என்று இரண்டாம் நிதி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்து உள்ளார்.

“முதலீட்டாளர்கள் தங்களது செல்வ வளத்தை இங்கேயே பெருக்குவதில் ஆர்வம் காட்டி வருவதால் இங்குள்ள வர்த்தகச் சூழல் அவர்களுக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

“நீடித்து நிலைக்கும் வளர்ச்சியை எட்ட அவ்வாறு செய்வது அவசியம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் நாணய ஆணைய (MAS) இயக்குநரவையின் துணைத் தலைவருமான திரு சீ, யுபிஎஸ் ஏஷியா செல்வவளக் கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) பங்கேற்று கலந்துரையாடினார்.

“முதலீட்டாளர்கள் சிங்கப்பூரை ஒரு முக்கியத் தளமாகப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

“மேலும், ஆசியாவின் முதலீட்டு மையமாகவும் சிங்கப்பூரை அவர்கள் கருதுகிறார்கள்.

“எனவே, அவர்களுக்கு வெவ்வேறு வகையான சிறப்பான, முதலீட்டுத் தெரிவுகளை எவ்வாறு வழங்கலாம் என்பது ஆராயப்படுகிறது.

“தங்களது செல்வ வளத்தை சிங்கப்பூருக்குக் கொண்டு வரவும் இங்கேயே அதனைப் பெருக்கவும் பொருத்தமான தெரிவுகளை அவர்களுக்கு வழங்குவதும் பரிசீலிக்கப்படுகிறது,” என்றார் அவர்.

வர்த்தகத்துக்கு உகந்த சூழல் மற்றும் புத்தாக்கத்துக்கு ஏற்றதாக சிங்கப்பூரின் கொள்கைகள் இருப்பதும் நிலையான, முறைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் இங்கு உள்ளதும் முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருவதாக திரு சீ தமது உரையில் குறிப்பிட்டார்.

செல்வவள நிர்வகிப்புத் துறை தொடர்ந்து செழிப்படைந்து வருவதாகக் கூறிய அவர், 2024ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, ஒற்றை குடும்ப அலுவலகங்களின் எண்ணிக்கை 2,000க்கும் மேல் அதிகரித்துவிட்டதாகத் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டின் இறுதியில் அந்த எண்ணிக்கை 1,400ஆக இருந்தது என்றும் திரு சீ சொன்னார்.

குறிப்புச் சொற்கள்