சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படையின் முதல் இரண்டு ‘இன்வின்சிபல்’ (218எஸ்ஜி வகை) நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆணைபெற்று, முழு ஆற்றலுடன் அதிகாரபூர்வமாக செயல்படத் தொடங்கியுள்ளன.
‘ஆர்எஸ்எஸ் இன்வின்சிபல்’, ‘ஆர்எஸ்எஸ் இம்பெக்கபல்’ ஆகிய இந்த இரு கப்பல்கள், பிரதமர் லாரன்ஸ் வோங்கின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) ஆணைபெற்றன.
‘ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா’ - சாங்கி கடற்படைத் தளத்தில் நடந்த நிகழ்ச்சியைக் காண மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், ‘இன்வின்சிபல்’ நீர்மூழ்கிக் கப்பல்களின் பெண் ஆதரவாளர்களும் (திருவாட்டி ஹோ சிங், டாக்டர் ஐவி இங், திருவாட்டி டியோ ஸ்வீ லியன்) வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் ஒரு புதிய ஆர்க்கிட் கலப்பின வகைக்கு ‘இன்வின்சிபல்’ நீர்மூழ்கிக் கப்பல்களின் பெயர் சூட்டப்பட்டது.
“இரு மரப் படகுகளுடன் 1967ல் தொடங்கப்பட்ட நம் கடற்படை வெகுதூரம் வந்துள்ளது. இன்றைய கடற்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களின் பங்கும் மிக முக்கியம்.
“நாம் தொடங்கியபோது சுவீடனிடமிருந்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கினோம். இன்றோ, நாம் புதிய வடிவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதிலும் நம் தேவைகளுக்கேற்ப தனிப்பயனாக்குவதிலும் தன்னம்பிக்கை கொண்டுள்ளோம்,” எனப் பாராட்டினார் பிரதமர் வோங்.
‘இன்வின்சிபல்’ நீர்மூழ்கிக் கப்பல்களின் உயர்தரத் தொழில்நுட்பத்தால் குறைந்த குழுவினருடன், குறைந்த சத்தத்துடன், கூடுதல் ஆயுதங்களுடன் போக்குவரத்து மிகுந்த நீர்நிலைகளில் செல்லமுடியும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் தற்காப்புக்காக இருட்டுக் கடலில் பாதை கண்டறியும் நிபுணர்
கடற்படை அதிகாரியாக இருந்த தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு கடற்படையில் 2011ல் சேர்ந்த இரண்டாம் ராணுவ வல்லுநர் நவீன்ராஜ் சந்திர சேகரன், 31, இன்று ‘ஆர்எஸ்எஸ் இன்வின்சிபல்’ நீர்மூழ்கிக் கப்பலின் கடற்பயணத் தலைவராக (Chief Navigation) பணியாற்றுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கத்தில் சாதாரணக் கப்பலில் பணியாற்றியவர், 2019ல் பயிற்சி மேற்கொண்டு நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றத் தகுதிபெற்றார்.
“சாதாரணக் கப்பலில் அனைத்தும் நம் கண்ணுக்குத் தெரியும்; ரேடார் பயன்படுத்துவோம். ஆனால் நீர்மூழ்கிக் கப்பலில் கண்ணுக்கு எதுவும் தெரியாது. ‘சோனார்’ மூலம்தான் பாதைகளைக் கண்டறிய முடியும்,” என தன் பணியின் முக்கியச் சவாலை அவர் கூறினார்.
தொழில்நுட்பக் கல்விக் கழக கிழக்குக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் படித்த இவர், படிக்கும்போதே முழுநேரக் கடற்படை வீரராகச் சேர்ந்தார். அதனால், கல்விக்கு அவர் உபகாரச் சம்பளமும் பெற்றார்.
“வெளிநாட்டுப் பயிற்சிக்குச் சென்றதால் முன்பு அறிந்ததைவிட மேலும் உயர்தரக் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றேன். இதனால், என் சகக் குழுவினருக்கும் கற்பிக்கமுடிந்தது.
“என் குடும்பத்தினர் எனக்குத் தங்கள் முழு ஆதரவையும் கொடுக்கின்றனர்,” என்றார் நவீன்ராஜ்.
‘இன்வின்சிபல்’ நீர்மூழ்கி
சிங்கப்பூரின் ஆழம் குறைந்த ஆனால் போக்குவரத்து அதிகமான வெப்பமண்டல நீர்நிலைகளில் செயல்படுவதற்காகவே சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படை ‘இன்வின்சிபல்’ வகை நீர்மூழ்கிக் கப்பல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தானியக்கம், கொண்டுசெல்லக்கூடிய சுமை, நீருக்குள் நீடிக்கும் தன்மை, பணிச்சூழலியல் போன்றவற்றில் இக்கப்பல்கள் சிறந்து விளங்குகின்றன.
ஆணைபெற்ற இரு கப்பல்களையும் அடுத்து, ‘இலஸ்டிரியஸ்’, ‘இனிமிடபல்’ என்ற மேலும் இரண்டு ‘இன்வின்சிபல்’ நீர்மூழ்கிக் கப்பல்கள் ஜெர்மனியில் தொடர்ந்து மேம்பாடு காண்கின்றன.
கட்டுமானப் பணிகள் முடிந்து ஜெர்மனியின் கீல் நகரில் ‘இன்வின்சிபல்’ 2019லும் ‘இம்பெக்கபல்’, ‘இலஸ்டிரியஸ்’ இரண்டும் 2022லும் ‘இனிமிடபல்’ 2024லும் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டன.
ஏற்கெனவே உள்ள சிங்கப்பூர்க் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களுடன் இணைந்து இவை சிங்கப்பூரின் கடற்பகுதிகளையும் கடல்வழிப் பாதைகளையும் பாதுகாக்கும்.