போலி மலேசிய வாகனப் பதிவெண்களைப் பயன்படுத்தி மலேசியாவில் RON95 வகை பெட்ரோலை சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் நிரப்பும் ஓட்டுநர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
RON95 வகை பெட்ரோலை மலேசியர்களுக்குக் குறைவான விலையில் விற்கும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் அதிக மானியம் வழங்குகிறது. இதன் விளைவாக அது மலேசியாவில் குறைவான விலையில் விற்கப்படுகிறது.
மலேசியாவில் RON95 வகை பெட்ரோலை மலேசிய வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தலாம். வெளிநாட்டு வாகனங்கள் அவ்வகை பெட்ரோலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலி மலேசிய வாகனப் பதிவெண்ணைத் தமது சிங்கப்பூர் வாகனத்தில் பொருத்தி ஓட்டுநர் ஒருவர் RON95 வகை பெட்ரோலை நிரப்ப முயன்றைப் பார்த்ததாக இணையவாசி ஒருவர் ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்துகொண்டார்.
இப்பதிவு நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஏறத்தாழ 1,700 முறை பகிரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறி்த்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கபி மோர்கன் என்று அழைக்கப்படும் அந்த இணையவாசி தெரிவித்துள்ளார்.
ஆனால், அப்படி ஒரு புகார் அளிக்கப்படவில்லை என்று மலேசியக் காவல்துறை கூறியது.
மலேசியாவில் RON95 வகை பெட்ரோலின் விலை, லிட்டருக்குக் கிட்டத்தட்ட 2.05 ரிங்கிட் (S$0.62). சிங்கப்பூரில் அதன் விலை, லிட்டருக்குக் கிட்டத்தட்ட $3.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, வாகனங்களின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் வாகனப் பதிவெண்களை அனைத்து வாகனங்களும் தெளிவாகக் காட்ட வேண்டும் என்று ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் அஸ்மில் ஸைனால் அட்னான் வலியுறுத்தியிருப்பதாக மலேசிய நாளிதழான ஹரியான் மெட்ரோ தெரிவித்தது.
வெளிநாட்டு வாகனங்களில் போலி மலேசிய வாகனப் பதிவெண்களைப் பொருத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 5,000 ரிங்கிட்டிலிருந்து 20,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

