சிங்கப்பூர் சமய அமைப்புகளுக்கு அவசரநிலைச் சமாளிப்புப் பயிற்சி

சிங்கப்பூர் சமய அமைப்புகளுக்கு அவசரநிலைச் சமாளிப்புப் பயிற்சி

2 mins read
b7275b72-2967-4899-88ed-46c46d9aa1a8
வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஊழியர்களும் தொண்டூழியர்களும் அவசரநிலைச் சமாளிப்பு, உளவியல் ரீதியான மீள்திறன் பயிற்சிகளைப் பெறலாம்.  - மாதிரிப்படம்: பிக்சாபே

சிங்கப்பூர் சமய அமைப்புகள் எதிர்பாரா சம்பவங்களைக் கையாள, அவசரநிலைச் சமாளிப்புப் பயிற்சிகளைப் பெறுகின்றன.

வழிபாட்டுத் தலத்தில் நபர் ஒருவர் கண்காணிப்புக் கருவிகளைப் படமெடுப்பது, பிரச்சினைக்கான அறிகுறியாக இருக்கலாம். வழக்கமற்ற, விசித்திரமான அத்தகைய நடத்தை குறித்து விழிப்புடன் இருப்பதற்கு, இங்குள்ள சமய அமைப்புகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

அறிகுறிகளைக் கண்டறிவதற்கான மேம்பட்ட பயிற்சி வகுப்புக்குச் செல்லும் சமய அமைப்புகளின் பிரதிநிதிகளால், சந்தேகத்துக்குரிய நபர்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றை அடையாளம் கண்டு புகார் செய்யமுடியும் என்று சிங்கப்பூர் காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) தெரிவித்தது.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பரில் புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் ஆலயத்தில் பாதிரியார் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். அதன் தொடர்பில், ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சமய அமைப்புகளின் இடங்களில் மற்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

சென்ற ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி, அதே கத்தோலிக்கத் தேவாலயத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின்கீழ் மற்றோர் ஆடவர் கைதுசெய்யப்பட்டார். அங்குள்ள சாக்கடை ஒன்றில் சந்தேகத்துக்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அது பார்ப்பதற்கு வெடிபொருளைப் போல் இருந்தாலும், எந்தவொரு வெடிபொருளும் அதில் கண்டுபிடிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி, அப்பர் தாம்சனில் உள்ள தேவாலயம் ஒன்றில், பாதிரியாரைக் குத்திய சந்தேகத்தின்பேரில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

சென்ற செப்டம்பரில், பன்றி இறைச்சி இருந்த பொட்டலங்கள் பள்ளிவாசல்களுக்கு அனுப்பப்பட்டன.

சமய அமைப்புகள், நெருக்கடிகாலத் தயார்நிலையை மேம்படுத்த, பாதுகாப்புச் சுய மதிப்பீடுகளைச் செய்துமுடிக்கலாம்; எதிர்பாரா நிகழ்வுக்கான திட்டங்களை மேம்படுத்த உதவி நாடலாம்; பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்குகளில் கலந்துகொள்ளலாம் என்று உள்துறை அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஊழியர்களும் தொண்டூழியர்களும் அவசரநிலைச் சமாளிப்பு, உளவியல் ரீதியான மீள்திறன் பயிற்சிகளைப் பெறலாம்.

இந்நிலையில், இந்து அறக்கட்டளை வாரியம் கண்காணிப்புக் கருவிகள், கட்டுப்படுத்தப்பட்ட நுழைவாயில்கள் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதன் ஆலயங்களில் கொண்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாகி சரோஜினி பத்மநாதன் கூறியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் முக்கிய நிகழ்வுகளிலும் விழாக்களிலும் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

அண்மையில் பிப்ரவரி 1ஆம் தேதி நடந்த தைப்பூசத் திருவிழாவின்போது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஏற்பாட்டாளர்கள் முக அடையாளத் தொழில்நுட்பத்துடனான கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தியதாக திருவாட்டி சரோஜினி கூறினார்.

குறிப்புச் சொற்கள்