மற்ற நாடுகளில் உள்ளவர்களைவிட சிங்கப்பூர்வாசிகளிடம் ரொக்கம், பங்குகள், வங்கிக் கணக்கில் நிதியிருப்பு போன்ற நிதிச் சொத்துகள் கூடுதலாக இருப்பதாக அனைத்துலக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ள அலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்துலக ஆய்வுக் குழு, சிங்கப்பூரின் மத்திய சேமநிதியை இதற்குக் காரணம் காட்டியது.
அண்மையில் வெளியிடப்பட்ட அலையன்ஸ் அனைத்துலக செல்வ அறிக்கையின்படி, 2023ல் நான்காவது இடத்தில் வந்த சிங்கப்பூரில் தனிநபர் நிகர நிதிச் சொத்துகளின் மதிப்பு 171,930 யூரோவாக (S$246,000) இருந்தது.
முதலிடம் பிடித்த அமெரிக்காவில் தனிநபர் நிகர நிதிச் சொத்துகளின் மதிப்பு 260,320 யூரோவாக இருந்தது. இரண்டாவது இடத்தில் சுவிட்சர்லாந்தும் (255,440 யூரோ) மூன்றாவது நிலையில் டென்மார்க்கும் (172,200 யூரோ) வந்தன.
ஆசியாவிலேயே முதலிடம் பிடித்த சிங்கப்பூருக்குப் பிறகு, உலகளவில் ஐந்தாவது நிலையில் தைவானும் (148,750 யூரோ) 12வது இடத்தில் ஜப்பானும் (91,940 யூரோ) வந்தன.
இந்த அறிக்கை அதன் 15வது பதிப்பில், கிட்டத்தட்ட 60 இடங்களில் உள்ள குடும்பங்களின் சொத்து, கடன் நிலைமையையும் ஆய்வு செய்தது.
தனியார் குடும்பங்களின் வருமானம் கூடியதால், 2023ல் சிங்கப்பூரின் மொத்த நிதிச் சொத்துக்கள் 5.8 விழுக்காடு வளர்ச்சி அடைந்தன. அது, 2022ஐவிட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம்.
பத்திரங்களும் வங்கி வைப்புகளும் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமான இரு சொத்து வகைகளாகும். ஆனால், காப்புறுதியும் ஓய்வூதியங்களும் பின்தங்கின.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து அலையன்ஸ் நிறுவனத்திடம் கேட்டபோது, 2023ல் வாழ்நாள் காப்புறுதியும் ஓய்வூதியச் சொத்துகளின் வளர்ச்சி நீண்டகால சராசரியைவிட குறைவாக இருந்ததாகக் கூறியது.
சிங்கப்பூரில் தனிநபர் கடன்களின் (liabilities) வளர்ச்சி 1 விழுக்காடாகக் குறைந்துவிட்டதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.