ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைச் சோதிக்க புதிய உதவித்தொகுப்பு

ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைச் சோதிக்க புதிய உதவித்தொகுப்பு

2 mins read
d0c50862-6651-449c-a608-5185db0c0f7d
கப்பெல்லா சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஏடிஎக்ஸ்ஏஐ’  கருத்தரங்கில், தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் பாதுகாப்பைச் சோதிப்பதில் சிங்கப்பூர் முக்கிய நிலையில் இருக்க விரும்புகிறது.

‘புரோஜெக்ட் மூன்ஷாட்’ எனும் புதிய உதவித்தொகுப்பை அது தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவுச் செயலிகளை உருவாக்குபவர்களை இலக்காகக் கொண்டு அது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெரிய மொழி மாதிரிகளின் தொடர்பில் எழக்கூடிய பாதுகாப்புச் சவால்களைக் கையாள அது நோக்கம் கொண்டுள்ளது.

“தொழில்களும் குடிமக்களும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, செயற்கை நுன்ணறிவுப் புத்தாக்கங்களைச் செயல்படுத்த, பாதுகாப்பான சூழலை அமைப்பதே நோக்கம்,” என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.

‘ஏஷியா டெக் எக்ஸ் சிங்கப்பூர்’ன் ஒரு பகுதியான ‘ஏடிஎக்ஸ்ஏஐ’ கருத்தரங்கில் அவர் பேசினார்.

‘புரோஜெக்ட் மூன்ஷாட்’ எனும் பெயர் சுட்டிக்காட்டுவது போலவே நமக்குச் சவால் விடுக்கும் ஒரு திட்டம் என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்து வருவதால், தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பைப் பெற மக்கள் விரும்புகின்றனர்.

சிங்கப்பூரில், செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, புத்தாக்கத்தைப் போலவே நிர்வகிக்கும் முறையும் முக்கியம் என்பதை அதிகாரிகள் நம்புவதாக திருவாட்டி தியோ கூறினார்.

‘ஏஐ வெரிஃபாய்’ அறநிறுவனமும், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் இணைந்து ‘புரோஜெக்ட் மூன்ஷாட்’ உதவித்தொகுப்பை உருவாக்கின.

செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘டேட்டாரோபாட்’, முதலீட்டு நிறுவனமான ‘தெமாசெக்’ ஆகிய பங்காளிகளுடன் இணைந்து செயல்பட்டு அது உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், சமூகங்களைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு தொடர்பான சட்டத்துக்குச் சில நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளபோதும், சிங்கப்பூரில் அதை அறிமுகப்படுத்த உடனடித் திட்டங்கள் இல்லை என்று திருவாட்டி டியோ கூறினார்.

தற்போதைய சட்டங்களும் விதிமுறைகளும் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவு தொடர்பான சில தீங்குகளைக் கையாள்வதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்