அணுவாற்றல் தொழில்நுட்பப் பாதுகாப்பை ஆராய சிங்கப்பூர் திட்டம்

2 mins read
2b484183-1938-4372-b4be-dff830c8bb53
2050ஆம் ஆண்டுக்குள் கரிமமற்ற எரிசக்தியாக மாற்றுவது சிங்கப்பூருக்குச் சாத்தியம் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நவீன அணுவாற்றல் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்த ஆய்வை நடத்தவும் அதில் நிபுணர்களின் அறிவாற்றலைப் பயன்படுத்தவும் சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அணுவாற்றல் சார்ந்த எரிசக்தி சிங்கப்பூருக்குச் சாத்தியமாகுமா என்பதைத் தீர்மானிக்கும் முயற்சிகளை சிங்கப்பூர் அதிகரித்து வருகிறது.

வழக்கத்தில் அணுவாற்றல் தொழில்நுட்பங்கள் பொருத்தமாக இல்லாதபோதிலும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் சிங்கப்பூருக்குப் பொருத்தமாக இருக்கக்கூடும் என்று தேசிய அளவில் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.

அதனால், உலகளவில் உருவாக்கப்பட்டு வரும் பல்வேறு நவீன அணுவாற்றல் தொழில்நுட்பங்களின் பாதுகாப்புச் செயல்பாடு குறித்து ஆராய, எரிசக்தி சந்தை ஆணையம் நிபுணர்களின் அறிவாற்றலைப் பயன்படுத்த விரும்புவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

அது தொடர்பான ஏலக்குத்தகை அறிவிப்பு என்று அரசாங்கத்தின் ‘Gebiz’ கொள்முதல் இணையத்தளத்தில் 2024 டிசம்பரில் வெளியிடப்பட்டது.

புதிய அணுவாற்றல் தொழிநுட்பப் பாதுகாப்பு குறித்த ஓராண்டு ஆய்வுக்கு ஆலோசனை நிறுவனங்கள் யோசனைகளை வழங்க எரிசக்திச் சந்தை ஆணையம் அதில் அழைப்பு விடுத்து இருந்தது.

“சிங்கப்பூருக்கான அணுவாற்றலின் நீண்டகால நம்பத்தன்மையை மதிப்பிடுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த ஆலோசனை ஆய்வு,” என்றது ஆணையம்.

ஒரு சிறிய தீவு என்ற முறையில் அணுவாற்றலைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று 2012ஆம் ஆண்டு சிங்கப்பூர் முடிவெடுத்தது.

ஆயினும், சர்ச்சைக்குரிய எரிசக்தி வளங்களைப் பாதுகாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் உருவாகி வருவதால் அதற்கேற்ப சிங்கப்பூர் தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறது.

கரிமம் மிகுந்த எரிசக்தித் துறையை 2050ஆம் ஆண்டுக்குள் கரிமமற்ற எரிசக்தியாக மாற்றுவது சிங்கப்பூருக்குச் சாத்தியம் என்று 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்தது.

நாட்டின் மொத்த எரிசக்தித் தேவையில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டை அணுவாற்றல் மூலம் பெறவும் அப்போது சாத்தியப்படும் எனவும் ஆய்வு கூறியது.

எனவே, அதன் பாதுகாப்பு அம்சங்களை ஆராய தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு வரும் ஆய்வுக்கான முதற்கட்ட ஏலக்குத்தகை நடவடிக்கை ஜனவரி 17ஆம் தேதி முடிவுற்றது. அதற்கு 24 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அருப் சிங்கப்பூர், ஹியுண்டாய் என்ஜினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன், சர்பானா ஜூரோங் கன்சல்டன்ட்ஸ், கேபிஎம்ஜி சர்விசஸ் போன்றவற்றின் விண்ணப்பங்களும் அதில் அடங்கும்.

வெளிநாடுகளில் இருந்தும் சில விண்ணப்பங்கள் வந்துள்ளன.

மொத்த விண்ணப்பங்களில் 10 இறுதிசெய்யப்படும். அதனைத் தொடர்ந்து, வரும் மாதங்களில் ஆய்வு தொடங்கும் என்று, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையில் ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்