தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் கடத்தப்பட்ட சிங்கப்பூர் மாணவி மோசடிக்காரர்களின் வலையில் சிக்கியதாகத் தகவல்

2 mins read
fb4478e7-ca92-4a48-bb62-66545ddf9d6e
மாணவரும் மாணவியும் சீனாவைச் சேர்ந்தவர்கள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் சிறுமி கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

ஹுவாங் சியோனான், 22, எனப்படும் பல்கலைக் கழக மாணவரான அவர், நவம்பர் 24ஆம் தேதி விடியற்காலை 4.08 மணிக்கு ஜாலான் ஸ்டேஷன் வட்டாரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து 15 வயது சிறுமியைக் கடத்தியதாக வியாழக்கிழமை (டிசம்பர் 5) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அந்தக் குற்றச்சாட்டு மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்டது.

மாணவரும் சிறுமியும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவரும் சிங்கப்பூரில் படிப்பவர்கள் என்றும் தெரிய வந்தது.

சிறுமியை ரகசியமாக அடைத்து வைக்கும் நோக்கில் அந்தக் கடத்தலை மாணவர் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாணவர் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டு பிணையில் விடுவிக்க இயலாத அளவுக்குக் கடுமையானது.

மேலும், மலேசியாவில் யாரையும் தெரியாது என்பதால் மாணவர் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

தமது கட்சிக்காரர் இதுவரை நடைபெற்ற விசாரணையில் ஒத்துழைத்ததால் அவரை பிணையில் விடுவிக்குமாறு மாணவரின் வழக்கறிஞர் கோரினார்.

இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி, பிணை வழங்க மறுத்தார்.

வழக்கு மீண்டும் 2025 ஜனவரி 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மாணவர் ஹுவாங்கிற்கு ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையே, சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை வெள்ளிக்கிழமை விளக்கியது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்படுவதாக அச்சிறுமியிடம் மோசடிப் பேர்வழிகள் கூறியதாகவும் அவர்களின் உத்தரவுக்கு இணங்க சிறுமி நடந்துகொண்டதாகவும் நம்பப்படுவதாகக் காவல்துறை தெரிவித்தது.

சிங்கப்பூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் என்றும் சீனா காவல்துறை அதிகாரிகள் என்றும் தங்களைக் கூறிக் கொண்ட சிலர் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி சிறுமியை கைப்பேசியில் அழைத்தனர்.

மாணவர் அனுமதி அட்டை தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அப்போது சிறுமியிடம் அவர்கள் கூறினர். பெரும் பணமோசடியில் சிறுமியின் பெயர் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறினர்.

தூங்குவது உட்பட 24 மணிநேரமும் காணொளி வழியாக சிறுமி கண்காணிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

சிங்கப்பூரில் தனியாக வசித்து வந்த சிறுமி, போலி ஆசாமிகளின் மிரட்டலுக்குப் பயந்து அவர்கள் சொல்படி மலேசியாவுக்குச் சென்றதாக சிங்கப்பூர் காவல்துறையின் மோசடித் தடுப்புப் பிரிவின் துணை கண்காணிப்பாளர் கோர் சிங் கியட் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உட்லண்ட்ஸில் இருந்து ஜோகூர் பாரு சென்ற சிறுமி, அங்குள்ள ஹோட்டலில் மாணவர் ஹுவாங் சியோனானைச் சந்தித்தார்.

நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் பங்கேற்காததால் அச்சிறுமியின் காப்பாளரை பள்ளி தொடர்பு கொண்டது.

அந்தக் காப்பாளர் சிங்கப்பூர் மற்றும் மலேசிய காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்