சென்ற ஆண்டு செப்டம்பரில் 28 வயது மின்னிலக்க வடிவமைப்பாளரான கிஸேன் யாப்புக்குத் திருமணமானது.
இருப்பினும், திருமணம் நடந்த 10 நாள்களில், அவருக்கு நான்காம் கட்ட புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, கணவர், குடும்பத்தாரின் ஆதரவோடு, யாப் ஆறு மாதங்கள் ‘கீமோ’ சிகிச்சையை மேற்கொண்டார்.
அவர் இன்ஸ்டகிராமில் தமது பயணத்தைப் பதிவிட்டார்.
திருமண நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தமது கழுத்தில் பெரிய கட்டி இருந்ததைக் கண்டதாக யாப் மதர்ஷிப்பிடம் கூறினார். மருத்துவரைச் சென்று பார்த்தபோது, அது புற்றுநோயாக இருக்கலாம் என்று அவர் கூறியதாக யாப் சொன்னார்.
இருப்பினும், திருமணத்தைத் தொடர அவரும் அவரது கணவரும் முடிவெடுத்தனர். திருமணத்திற்குப் பிறகு பரிசோதனை மேற்கொண்டதை அடுத்து, யாப்பிற்கு நான்காம் கட்ட ‘ஹோட்ஜ்கின்ஸ் லிம்ஃபோமா’ (Hodgkins Lymphoma) இருப்பது உறுதியானது.
இவ்வாண்டு மார்ச் மாதம், அவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குவோருக்குத் தமது கதை ஓர் உந்துதலாக அமையும் என்ற நம்பிக்கையில் அதனைப் பகிர்ந்துகொண்டதாக யாப் கூறினார்.

