தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூத்த ஊழியர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கான வழிகள் ஆராய்வு

2 mins read
700e3a69-95a8-4d66-bcec-84d57d3ffc3d
மூத்தோர் வேலைவாய்ப்புக்கான முத்தரப்பு ஊழியர்குழு ஏற்படுத்தப்பட்டு இருப்பது காலத்திற்குப் பொருத்தமான நடவடிக்கை என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவர் டான் ஹீ டெக் கூறியுள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஊழியரணியில் மூத்தோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் அடுத்த பத்தாண்டுகள் சவால்மிக்கதாக இருக்கும் என்றாலும் சிங்கப்பூர் அந்த சவாலில் சிக்காமல் தனித்து நிற்க முடியும்.

சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவர் டான் ஹீ டெக் தமது மே தினச் செய்தியில் இதனைத் தெரிவித்து உள்ளார்.

அந்தச் செய்தியில் அவர் மேலும் கூறுகையில், மற்ற பொருளியல் நாடுகளில் வயதானோர் மக்கள்தொகை பொருளியல் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“மூத்தோருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கொள்கைகளை வகுப்பதற்கான வழிகளில் சிங்கப்பூர் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் ஊழியரணியின் நீக்குப்போக்குத் தன்மையையும் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதற்கான வழிகளையும் அது ஆராய்கிறது.

“நடப்புக்கு வர உள்ள மூத்தோர் வேலைவாய்ப்புக்கான முத்தரப்பு ஊழியர்குழுவை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அது காலத்துக்குப் பொருத்தமானதொரு நடவடிக்கை.

“மூத்த ஊழியர்களின் திறனையும் அறிவாற்றலையும் பயன்படுத்துவதற்கான தீர்வுகள் தொடர்பிலான பணிகளில் ஈடுபட அரசாங்கம், நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் ஆகிய முத்தரப்புப் பங்காளிகளை அந்த நடவடிக்கை ஒன்றிணைக்கிறது,” என்றார் திரு டான்.

என்டியுசி ஆதரவு

உலக வரிவிதிப்பு விவகாரம் ஊழியர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் பாதிப்புக்கு ஆளாகும் ஊழியர்களை ஆதரிக்க முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து அது பணியாற்றும் என்றும் என்டியுசி தலைவர் கே தனலெட்சுமியும் என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கும் தெரிவித்து உள்ளனர்.

“தற்போதைய நிச்சயமற்ற சூழல் நடப்புகள் உலகை மாற்றி அமைத்து வருகின்றன. சிங்கப்பூர் அதற்கு விதிவிலக்கு அல்ல.

“குறிப்பாக, தீவிரமடைந்து வரும் உலக வர்த்தகப் பதற்றங்களில் இருந்து சிங்கப்பூர் மட்டும் விடுபடப்போவதில்லை,” என்று அந்த இருவரும் மே தினத்தையொட்டி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

இப்படிப்பட்ட நிலவரத்தில் சவால்களை வெல்ல தொழிலாளர் இயக்கம் ஊழியர்களுக்கு ஆதரவாக நிற்பதோடு புதிய வாய்ப்புகளை அவர்களுக்குத் தேடித் தரும் என்றும் கூட்டறிக்கை கூறுகிறது.

மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு ஆகிய முத்தரப்புப் பங்காளிகளுடன் என்டியுசி வலுவான உறவை நிலைநாட்டி வருவதை திருவாட்டி தனலெட்சுமியும் திரு இங்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்