ஸ்பெயினில் சிங்கப்பூரரான ஆட்ரி ஃபாங் டிரோவ் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று ஸ்பெயினின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகமான லா வெர்டாட் பிப்ரவரி 20ஆம் தேதி தெரிவித்தது.
இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் சிங்கப்பூரரான மிஷல் ஓங் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டார்.
இதற்கு முந்தைய மாதத்தில் திருவாட்டி ஃபாங்கின் உடல் பல கத்திக் குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், 39 வயது சந்தேக நபரான சிங்கப்பூரர், அவரை 30 முறைக்கு மேல் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது என்று பல உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நீதிமன்றத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முன்னிலையான அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆதாரங்களை சுட்டிக்காட்டி ஓங் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஸ்பெயினில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 முதல் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
ஆனால் தற்காப்புத் தரப்பினர், வழக்கைத் தள்ளுபடி செய்து புதிய விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஓங்கின் கைப்பேசி ஆதாரத்தில் நிபுணர்களின் கருத்தை அறிவது, ஓங்கிடமிருந்து மீண்டும் அறிக்கையை பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஓங், கைது செய்யப்பட்டதிலிருந்து மௌனம் காத்து வருகிறார்.

