தாய்லாந்திலிருந்து ஜப்பானுக்கு எட்டோமிடேட் அடங்கிய திரவத்தைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சிங்கப்பூரர் ஒருவர் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனமான ஏஎன்என் நியூஸின் தகவல்படி, சந்தேக நபரான முகமது ஃபைஸ் முகமது நாசர் என்பவரிடம், வெவ்வேறு வண்ணக் காகிதங்களால் சுற்றப்பட்ட பல பிளாஸ்டிக் பாட்டில்கள் அடங்கிய ஒரு பயணப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் ஏப்ரல் 18ஆம் தேதியன்று நரிட்டா விமான நிலையத்தில் பிடிபட்டார்.
‘ஸோம்பி சிகரெட்டுகள்’ என்றும் அழைக்கப்படும் எட்டோமிடேட், மே 2025 முதல் ஜப்பானில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்திலிருந்து ஜப்பானுக்கு போதைப்பொருளைக் கடத்துவதற்காக, சிங்கப்பூரில் உள்ள தனக்கு அறிமுகமான ஒருவர் $2,000 தருவதாக நாசர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது எட்டோமிடேட் என்று தனக்குத் தெரியாது எனக் கூறி, அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை ஓரளவு மறுத்துள்ளதாக ஏஎன்என் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஓர் அனைத்துலக கடத்தல் அமைப்பு இதில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறை நம்புகிறது. இதன் தொடர்பிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் 4 கிலோ எட்டோமிடேட்டுடன் பிடிபட்ட தைவான் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட இரண்டு நாள்களுக்குப் பிறகு நாசரின் கைது நிகழ்ந்துள்ளது. இது ஒரு சாதனை அளவிலான பறிமுதல் என்று காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
50 வயதான லியு டிங் யூ, இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் அந்தப் பெட்டியை இரவல் வாங்கியதாகவும், அதில் எட்டோமிடேட் இருப்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
லியுவும் இதேபோல் தாய்லாந்திலிருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

