சிங்கப்பூரில் கடற்புற்களை அதிகரிக்கும் நோக்கில் மறுசீரமைப்பு திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.
கடற்புற்கள் கார்பனை உள்வாங்கும் தன்மையைக் கொண்டதால் அவற்றை அதிக அளவில் சிங்கப்பூர் கடலோரப் பகுதிகளில் வளர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓசிபிசி வங்கியும் தேசியப் பூங்காக் கழகமும் செப்டம்பர் 27ஆம் தேதி தகவல் வெளியிட்டன. சிங்கப்பூரில் கடற்புற்கள் மறுசீரமைப்புக்காகத் தொடங்கப்பட்ட முதல் திட்டம் என்றும் அவை குறிப்பிட்டன.
மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் புற்களின் இனப்பெருக்கம், புற்கள் வளர சிரமப்படும் இடங்களில் புற்களை நன்றாக வளர்ப்பது போன்றப் பிரிவுகளிலும் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான மூன்று ஆண்டு ஆராய்ச்சிக்கு ஓசிபிசி 1 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
செயிண்ட் ஜான்ஸ் தீவு தேசிய கடல் ஆய்வகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், தேசியப் பூங்காக் கழகம் ஆகிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொள்கின்றன.
தென்கிழக்காசியாவில் வெப்பமண்டல கடற்புற்களின் இனப்பெருக்க பண்புகள் தொடர்பான ஆராய்ச்சி பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்று தேசியப் பூங்காக் கழகம் கூறியது.
சிங்கப்பூரில் 12 வகை கடற்புற்கள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வடக்குப் பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களில் கடற்புற்களின் புல்வெளியைக் காண முடியும். தென் பகுதியில் உள்ள தீவுகளிலும் இவை அதிகமாக உள்ளன.
அண்மை காலமாக, கடற்புற்கள் கார்பனை உள்வாங்கி மண்ணுக்குள் அனுப்பும் தன்மையைக் கொண்டுள்ளது என்று உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.
காடுகளை விட கிட்டத்தட்ட 40 மடங்கு கடற்புற்கள் கார்பனை உள்வாங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அது கிட்டத்தட்ட 18 விழுக்காடு கடலுக்குள் கார்பனை சேமிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் சிங்கப்பூரில் கடந்த 50 ஆண்டுகளில் 45 விழுக்காடு கடற்புற்கள் கடலோரப் பகுதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கையால் அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

