சிங்கப்பூரில் இயங்கிய ‘ட்ரூ ஃபிட்னஸ்’, ‘ட்ரூ யோகா’ ஆகிய இரு உடற்பயிற்சி நிலையங்கள் தங்களின் செயல்பாடுகளைத் திடீரென செப்டம்பர் 11ஆம் தேதி நிறுத்தின.
கடுமையான சந்தைப் போட்டி, நிதி நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக வர்த்தகத்தைக் கலைப்பதாக ஹாங்காங்கில் இருக்கும் அதன் பிரதான நிறுவனமான ‘கொன்டாஃபார்மா சைனா ஹோல்டிங்ஸ்’ தெரிவித்தது.
ட்ரூ சிங்கப்பூர் குழுமத்தின்கீழ் இயங்கிய 7 கிளைகளும் மூடப்பட்டதால், அங்குப் பணியாற்றிய முழு நேர, தன்னுரிமை ஊழியர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளைக் கண்டறிய சிங்கப்பூர் உடலுறுதிக் கூட்டமைப்பு உதவி வருகிறது.
தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தேசியப் பயிற்றுநர், பயிற்சியாளர்கள் சங்கம், வேலை நியமன, வேலைத்திறன கழகம் (இ2ஐ) ஆகியவற்றுடன் இணைந்து கூட்டமைப்பு இந்த முயற்சியை மேற்கொள்கிறது.
இருப்பினும், பாதிக்கப்பட்டோரின் சம்பளம், தரகுத் தொகை ஆகியவற்றை மீட்டுத்தரும் முயற்சியில் தலையிடப்போவதில்லை என அக்கூட்டமைப்பின் தலைவரும் இணை நிறுவனருமான ஷோன் டான் தெரிவித்தார்.
செப்டம்பர் 11 மாலை 6 மணி நிலவரப்படி மேற்குறிப்பிட்ட விவகாரம் தொடர்பில் 241 புகார்கள் வந்துள்ளதாகச் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.
மேலும், பயன்படுத்தப்படாத சந்தாக்கள், சேவைகள் மூலம் $609,000க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
செப்டம்பர் 10ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் நிறுவனம் மூடப்படுவது குறித்து மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
அந்த மின்னஞ்சலில், அனைத்துக் கிளைகளும் அதன் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகின்றன. அவை, உடனடியாக மூடப்படுவதால் செப்டம்பர் 11ஆம் தேதி அனைத்து கிளைகளும் திறக்கப்படாது என ‘ட்ரூ ஃபிட்னஸ்’, ‘ட்ரூ யோகா’ ஆகிய நிறுவனங்களின் மனிதவளத் துறை தெரிவித்திருந்தது.
அத்தகவல்கள் சிங்கப்பூரில் பணியாற்றிய அதன் ஊழியர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

