புதிய சிங்கப்பூர் விளையாட்டு மன்ற (திருத்த) மசோதா கடந்த ஜனவரி 14ஆம் தேதி அறிமுகம் கண்டது.
அதன்மூலம், விளையாட்டுப் பயிற்சிகளுக்கான தரங்களை நிறுவ ஸ்போர்ட் சிங்கப்பூர் (SportSG) ஆணை வலுப்படுத்தப்படுகிறது என்று கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் முழுவதும் விளையாட்டுத் துறை சார்ந்த தரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
விளையாட்டுப் பயிற்றுநர்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) ‘சாங்கி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோ’ வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திருவாட்டி கோ உரையாற்றினார்.
“விளையாட்டாளர்கள் வெற்றிபெற சுற்றியுள்ளோர் ஆதரவு தேவைப்படுவதுபோல, பயிற்றுநர்கள் மேம்பட்ட செயல்திறனை வெளிப்படுத்தவும் வலுவான ஆதரவு தேவை,” என்று அவர் சொன்னார்.
சென்ற ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் (சீ கேம்ஸ்), உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகள், பஹ்ரேனில் நடைபெற்ற ஆசிய இளையர் விளையாட்டுப் போட்டிகள், துபாயில் நடைபெற்ற உடற்குறையுள்ளோருக்கான ஆசிய இளையர் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் பங்குபெற்று பதக்கம் வென்ற விளையாட்டாளர்களின் பயிற்றுநர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.
79 விளையாட்டுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் தங்கள் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டனர்.
கடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாகக் கபடி சேர்க்கப்பட்ட நிலையில், அதில் சிங்கப்பூர்க் குழு பதக்கம் வென்ற தருணத்தைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் அணியின் பயிற்றுவிப்பாளர் அண்ணாதுரை சுந்தர், 30.
தொடர்புடைய செய்திகள்
சிறுவயதிலிருந்தே இந்தியாவில் அதிகம் கபடி விளையாடிய அவர், 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஆனார்.
‘சீ கேம்ஸ்’ போட்டிகளில் கபடிக்குக் கிட்டிய வரவேற்பு தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக அவர் சொன்னார்.
“என் விளையாட்டாளர்களின் வெற்றி என்னுடைய தனிப்பட்ட வெற்றியைப் போல இருந்தது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் திரு சுந்தர்.
மற்றொரு பயிற்றுநரான சௌதி குமரவடிவேல், 28, கபடி விளையாட்டாளர்கள் வளர்வதைப் பார்ப்பது மிகவும் வித்தியாசமான ஓர் உணர்வு என்றார்.
“நான் அவர்களைச் சிறு வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். அவர்கள் பதக்கங்கள் வென்றதைக் கண்டது விவரிக்க முடியாத ஒன்று,” என்றார் திரு சௌதி.
எதிர்காலத்தில் கபடி ஒலிம்பிக் போட்டிகளிலும் இடம்பெற வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் அவர் சொன்னார்.

