இளையோரின் பிணைப்புக்கு விளையாட்டு விழா: டேவிட் நியோ

2 mins read
விளையாட்டு விழா மூன்று குழுமங்களை உள்ளடக்கிய 16 பள்ளிகளில் அக்டோபர் மாதம் நடைபெறும்
dfd3c91d-36f4-4949-870e-eb63c79ad2f8
பள்ளிகளில் உள்ள பொது வசதிகளைப் பயன்படுத்தி மாறுபட்ட பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் உறவாடி தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் போட்டிகளுக்கான காரணமாகும்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளிக் குழும நிலையில் புதிய விளையாட்டுப் போட்டிகள் இளையோர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ வியாழக்கிழமை (செப்டம்பர் 25) கூறினார்.

பள்ளிகளில் உள்ள பொது வசதிகளைப் பயன்படுத்தி மாறுபட்ட பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் உறவாடி தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் போட்டிகளுக்கான காரணமாகும்.

அக்டோபரில் தொடங்கும் பள்ளி விளையாட்டுத் திருவிழா (The School Sports Fiesta), மூன்று குழுமங்களை உள்ளடக்கிய 16 பள்ளிகளில் நடைபெறும் என்று அதிபரின் உரை குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது அமைச்சர் நியோ கூறினார்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஆதரவுடன் அந்த விளையாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த விழா எதிர்காலத்தில் பள்ளிக்குழுமங்களுக்கு இடையே ஏற்பாடு செய்யப்படவுள்ள மேலும் பல போட்டிகளுக்கான தொடக்கம்.

அவர் முதன்முதலாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய 20 நிமிட உரை, பொது இடங்களைப் பகிர்ந்து இளையோர்களை ஒன்றிணைத்து சமூக ஒற்றுமையைப் பரைசாற்றும் விதமாக அமைந்தது.

விளையாட்டு, மரபுகள், கலைகள் ஆகியன இளையர்களை ஒருங்கிணைத்து வலுவான பிணைப்புகளை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கைகள்.

இளையர்கள் பலருக்குச் சில நண்பர்களே உள்ளனர் என்ற கவலை 2022ல் நடந்த தேசிய இளையோர் ஆய்வில் தெரியவந்தது.

பத்து ஆண்டுகளில் நெருங்கிய நண்பர்களே இல்லாத இளையர்களின் விகிதம் 4 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காட்டுக்கு உயர்ந்ததையும் அமைச்சர் நியோ சுட்டினார்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் பள்ளிகளுக்கான விளையாட்டு விருதுகளில் புதிய விளையாட்டுகளும் இணைத்துக்கொள்ளப்படும் என்று திரு நியோ சொன்னார்.

குறிப்புச் சொற்கள்