பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து சிங்கப்பூருக்குத் திரும்பிய விளையாட்டு வீரர்களை விமான நிலையத்தில் வரவேற்றதை என்றும் மறக்கமாட்டார் 33 வயது வெளிநாட்டு ஊழியர் செல்வராஜ் சக்திவேல்.
சிங்கப்பூரில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குப் பக்கபலமாக இருந்துவரும் ‘டீம் நிலா’ தொண்டூழியரணியில் அவர் அக்டோபர் 2023ல் சேர்ந்தார்.
அதன்வழி அவர் 700 மணி நேரத்துக்கு மேல் தொண்டூழியம் புரிந்துள்ளார்; அதற்காக விருதும் பெற்றுள்ளார்.
உட்புற வடிவமைப்பு நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்துவரும் அவர், வார இறுதி நாள்களை ‘டீம் நிலா’வுக்கு அர்ப்பணிக்கிறார். இப்போது அவர் தொண்டூழியர்த் தலைவராக முக்கியப் பொறுப்பையும் வகிக்கிறார்.
“டீம் நிலாவில் தலைமைத்துவப் பயிற்சிகள் நடத்துகிறார்கள். இதன்வழி முடிவெடுக்கும் திறனும் நிகழ்ச்சி நடத்தும் தன்னம்பிக்கையும் என்னுள் வளர்ந்துள்ளன,” என்றார் சக்திவேல்.
‘ரக்பி 7ஸ்’, ‘பெஸ்தா சுக்கான்’, உலக மேசைப்பந்துப் போட்டிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ள அவர், ‘எஸ்ஜி60’ஆண்டில் தன்னையே மிஞ்ச விரும்புகிறார்.
சக்திவேல் போன்ற தொண்டூழியர்களை ஆற்றல்படுத்த, கூடுதல் பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக மார்ச் 8ஆம் தேதி நடைபெற்ற முதல் ‘டீம் நிலா’ கேளிக்கைவிழாவில் கூறினார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
இதன்வழி விளையாட்டுப் போட்டி மேலாண்மை, விளையாட்டுத் தளவாடங்கள் போன்றவற்றில் தொண்டூழியர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ளலாம் என்றார் பிரதமர் வோங்.
தொடர்புடைய செய்திகள்
இன்னும் அதிகமான தொண்டூழியர்கள், தொண்டூழியர்த் தலைவர்களாகிக் கூடுதல் பொறுப்பும் வகிப்பர் என அவர் கூறினார்.
முதல் ‘டீம் நிலா’ கேளிக்கைவிழா
2015ல் தொடங்கப்பட்ட ‘டீம் நிலா’, அதன் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி புக்கிட் கேன்பராவில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வுக்கு 5,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
அதன் பத்தாண்டுப் பயணத்தை நினைவுகூரும் கண்காட்சியைப் பிரதமர் வோங் திறந்துவைத்தார்.
அவருடன் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வருகையளித்தனர்.
2024ல் அறிமுகமான புதிய ‘டீம் நிலா’ சட்டையில் பிரதமர் வோங், அமைச்சர் ஃபூ, திரு சுவா இணைந்து கையெழுத்திட்டு கண்காட்சியில் வைத்தனர்.
‘டீம் நிலா’ 2015ல் தொடங்கியபோது பிரதமர் வோங் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சராக இருந்தார்.
“அப்போது சிங்கப்பூரில் தென்கிழக்காசிய விளையாட்டுகள், உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகள் இரண்டும் நடைபெறவிருந்தன. தொண்டூழியர்கள் தேவைப்பட்டனர். அதன்வழிப் பிறந்ததே டீம் நிலா,” என அவர் நினைவுகூர்ந்தார்.
“அப்பொழுது 33,000 பேர் பதிவுசெய்தனர். இன்று, நமக்கு 50,000 தொண்டூழியர்கள் உள்ளனர். நீங்கள் 2,800க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஆதரித்து, 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மணி நேரத்திற்குத் தொண்டூழியம் செய்துள்ளீர்கள்,” எனப் பாராட்டினார் பிரதமர் வோங்.
கொவிட்-19 காலகட்டத்தின்போது டீம் நிலா தொண்டூழியர்கள் முகக்கவசங்கள், கைச் சுத்திகரிப்பான்களை விநியோகித்தது, துருக்கியில் நிலநடுக்கம் நடைபெற்றபோது நன்கொடைப் பொருள்களை வகைப்படுத்தியது போன்றவற்றையும் அவர் மெச்சினார்.
விளையாட்டுக்கு முக்கிய ஆண்டாக 2025 திகழும்
இவ்வாண்டின் உலக நீர் விளையாட்டுப் போட்டிகள் (World Aquatics Championships) முதன்முறையாக தென்கிழக்காசியாவில், குறிப்பாக சிங்கப்பூரில் நடைபெறவுள்ளன.
உடற்குறை உள்ளோருக்கான உலக நீச்சல் போட்டிகளும் முதன்முறையாக ஆசியாவில், குறிப்பாக சிங்கப்பூரில் நடைபெறும்.
இரண்டிலும் ‘டீம் நிலா’ தொண்டூழியர்கள் முக்கியப் பங்கை வகிப்பார்கள் என்றார் பிரதமர் வோங்.
இவற்றுக்கும் வருடாந்தர ‘கெட்ஏக்டிவ்! சிங்கப்பூர்’ தேசிய தின கொண்டாட்டத்துக்கும் மொத்தம் 10,000 தொண்டூழியர்கள் 250,000 மணி நேரம் தொண்டூழியம் புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பமாகத் தொண்டூழியம்
2020 முதல் ரமேஷ் குமார் - அருண்மொழி இணையர் ‘டீம் நிலா’ மூலம் தொண்டாற்றி வந்துள்ளனர். கடற்கரையைச் சுத்தம் செய்தல், மரம் நடுதல் போன்றவற்றில் அவர்கள் பங்காற்றியுள்ளனர். குடும்பமாகப் பங்காற்ற ‘டீம் நிலா’ நல்லதொரு தளம் என அவர்கள் கூறினர்.