பிரபலமான இசைத் தளமான ‘ஸ்பாட்டிஃபை’ தனது பிரிமியம் சந்தாக் கட்டணத்தை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த சந்தாக் கட்டண உயர்வால் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் 200 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். இது குறித்த அறிவிப்பை ‘ஸ்பாட்டிஃபை’ திங்கட்கிழமை தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய சந்தாக் கட்டண உயர்வு செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என ‘ஸ்பாட்டிஃபை’ பிரிமியம் சந்தாதாரர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில்,‘ஸ்பாட்டிஃபை’ தனிநபருக்கானப் பிரிமியம், குடும்பங்களுக்கானப் பிரிமியம், மாணவருக்கானப் பிரிமியம் உட்பட நான்கு பிரிமியத் திட்டங்களை வழங்குகிறது.
தனிநபருக்கான மாதாந்திரப் பிரிமியத்தின் சந்தாக் கட்டணம் $9.99 யிலிருந்து $10.98 ஆக உயரும் எனவும் குடும்பங்களுக்கான மாதாந்திரப் பிரிமிய சந்தாக் கட்டணம் $16.98 யிலிருந்து $17.98 ஆக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சரக்கு,சேவை வரி (ஜிஎஸ்டி) சேர்க்கப்பட்டதா எனத் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தச் சந்தா உயர்வால் அமெரிக்கா, கனடா, பிரேசில், நியூசிலாந்து, இந்தோனீசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் ‘ஸ்பாட்டிஃபை’ பிரிமியம் பயனாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

