தடுப்பூசி எதிர்ப்பு நிறுவனத்தைத் தொடங்கியவரின் கணவர் மீது ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டுகள்

1 mins read
3b4560b5-1494-428c-baac-3d966c52aca5
ரேமண்ட் இங் கய் ஹோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியவரின் கணவரான ரேமண்ட் இங் கய் ஹோ மீது ஏமாற்றியதாக 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

‘ஹீலிங் தி டிவைட்’ நிறுவனத்தைத் தொடங்கிய ஐரிஸ் கோ எனும் மாதின் கணவரான அவர் மீது வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 7) அக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கிட்டத்தட்ட 61,000 வெள்ளி சம்பந்தப்பட்ட ஏமாற்று நடவடிக்கைகளில் 51 வயது இங் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2019லிருந்து 2020ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் பல ஏமாற்றுச் செயல்களை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. அச்செயல்களுக்கும் ‘வெண்டிங் மெ‌ஷின்’ தானியக்க இயந்திரங்களைக் கையாளும் நிறுவனமான வெண்ட்‌ஷேர் நிறுவனத்துக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

12 பேர் ஏமாற்றப்பட்டதாகவும் சுமார் 60,800 வெள்ளி தொகை ஏமாற்றுச் செயல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ஏமாற்றப்பட்டதாக நம்பப்படும் ஒவ்வொருவரிடமிருந்தும் 1,000லிருந்து 13,900 வெள்ளி வரை பறிக்கும் செயல்கள் இடம்பெற்றதாகக் கருதப்படுகிறது.

பிறருக்கு நம்பிக்கை தந்து அவர்களை ஏமாற்றி வெண்ட்‌ஷேர் நிறுவனத்துக்குக் கட்டணம் செலுத்த வைத்தது போன்ற குற்றங்களை இங் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.

இங் அக்குற்றங்களைப் புரியவில்லை என்று கூறி அவரின் தரப்பு வாதிடப்போவதாக வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஏமாற்றியதாகச் சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்