‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ தனது பேருந்து, ரயில் பணிமனைகளில் புதிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு, முழுமையான பழுதுபார்த்தல் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது.
வெளிநாட்டுச் சேவைகளைத் தவிர்த்து, பழுதுபார்க்கும் நேரத்தை மாதங்களிலிருந்து நாள்களாகக் குறைக்க எஸ்பிஎஸ் டிரான்சிட் இச்சேவைகளை அறிமுகப்படுத்துகிறது.
புதன்கிழமையன்று (நவம்பர் 18) கிழக்கு செங்காங்கில் உள்ள வடக்கு-கிழக்கு ரயில் பாதைப் பணிமனையில் இச்சேவைகள் தொடங்கப்பட்டன.
அந்நிகழ்வில் பேசிய ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி சிம், “ஒட்டுமொத்தத்தில், இப்பங்காளித்துவங்கள் வெளிநாட்டுச் சேவைகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, பழுதுபார்க்கும் நேரத்தைக் குறைப்பதோடு, அதிக ரயில்களையும் பேருந்துகளையும் சேவைக்குத் தயாராக வைத்திருக்க உதவும்,” என்றார்.
மின்னணுப் பாகங்களைக் கண்டறிந்து பழுதுபார்ப்பது முதல் முக்கிய ரயில்வே சாதனங்களை முழுமையாகப் பழுதுபார்ப்பது வரை சிக்கலான பணிகளை ஊழியர்கள் மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.
“பயிற்சி, அறிவுப் பரிமாற்றம் மூலம், எங்கள் பொறியாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் அதிகப் பொறுப்புகளுடன் கூடிய சிறப்புப் பதவிகளுக்கு முன்னேற முடியும். முக்கியமாக, சிறந்த வாழ்க்கைத்தொழில், ஊதிய வாய்ப்புகளையும் பெற முடியும்,” என்று அவர் கூறினார்.
ஆறு பேருந்துப் பணிமனைகளிலும் இரண்டு ரயில் பணிமனைகளிலும் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்த 12 நிறுவனங்களுடன் எஸ்பிஎஸ் டிரான்சிட் கைகோக்கிறது.
பிரெஞ்சு ரயில் தொழில்நுட்ப நிறுவனமான அல்ஸ்டோம், சீன ரயில் பெட்டித் தயாரிப்பாளர் சிஆர்ஆர்சி கிங்டாவோ சிஃபாங் (CRRC Qingdao Sifang), ஜெர்மானிய நிறுவனமான சீமென்ஸ் மொபிலிட்டி ஆகியவை இதில் அடங்கும்.
போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் இத்தொடக்க விழாவில் கலந்துகொண்டார். அங்கு தண்டவாளம் மாற்றும் இயந்திரங்களுக்கான சிறப்புச் சேவை மையம் காட்சிப்படுத்தப்பட்டது.
தென்கிழக்காசியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இம்மையம், சீமென்ஸ் மொபிலிட்டி, ஜெர்மானிய ரயில் சாதன விநியோகிப்பாளர் வோஸ்லோ ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
ரயில்களை வெவ்வேறு தடங்களுக்குத் திருப்பிவிடும் இயந்திரம் பழுதடைந்தால், சரிசெய்யச் சராசரியாக ஆறு மாதங்கள் ஆகும். இருவழிப் போக்குவரத்து, கோளாறு கண்டறிதல், பழுதுபார்ப்புக்காக வெளிநாட்டு மூல உற்பத்தியாளரிடம் அனுப்ப வேண்டியிருந்தது. இப்போது சிங்கப்பூரிலேயே ஒன்று அல்லது இரு வாரங்களில் சரிசெய்துவிடலாம்.
போர்த்துகீசிய நிறுவனத்துடன் இணைந்து மின்னியல் பேருந்துகளுக்கான முன்கணிப்புப் பராமரிப்புத் திறனை வலுப்படுத்துவதாக நிறுவனம் கூறியது.
சீன மின்னியல் கார் தயாரிப்பாளர் பிஒய்டி, பொது மின்னியல் பேருந்துகளைப் பராமரிக்க அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.
