இம்மாதம் 21ஆம் தேதி மியன்மாரின் இரவாடி டெல்டா பகுதிக்கு மேலே சிங்கப்பூர் ஏர்லைன்சின் எஸ்கியூ321 விமானம் பறந்தபோது, காற்றுக் கொந்தளிப்பால் அது 62 நொடிகளுக்குக் குலுங்கியதை அதிலிருந்த பயணிகள் உணர்ந்தனர்.
அந்த 62 நொடிகளுக்குள் அவ்விமானம் இருமுறை விரைந்து மேலேறியதையும் கீழிறங்கியதையும் ‘ஃபிளைட்ரேடார்24’ இணையத்தளத் தரவுகள் கூறுகின்றன.
அந்த இடைநில்லா விமானம் லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்தபோது பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நெருக்கடியை எதிர்கொண்டது.
அப்போது, அவ்விமானம் 37,000 அடி உயரம் என்ற தனது பறக்கும் நிலையிலிருந்து 37,400 அடிக்கு உயர்ந்து, பிறகு 36,975 அடிக்கு இறங்கி, பின்னர் மீண்டும் 37,000 அடியில் நிலைகொண்டதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, பிற்பகல் 4.06 மணியிலிருந்து 4.10 மணிக்குள் அவ்விமானம் 37,000 அடியிலிருந்து 31,000 அடிக்கு இறங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், அண்மைய தரவுகள் அதற்கு முரணாக உள்ளன.
இதனிடையே, எஸ்கியூ321 விமானத்தின் விமானி அறையிலுள்ள குரல் பதிவுக்கருவி மற்றும் விமானத் தரவுப் பதிவுக் கருவியில் பதிவாகியுள்ள தரவுகளை சிங்கப்பூர்ப் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு ஆராய்ந்து வருவதாகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் வெள்ளிக்கிழமை (மே 24) தெரிவித்துள்ளார்.
எஸ்கியூ321 விமானத்தில் 211 பயணிகளும் 18 ஊழியர்களும் இருந்த நிலையில், அவர்களில் ஒருவர் மாண்டுபோனார்; இரண்டு வயதுக் குழந்தை உட்பட பலர் காயமடைந்தனர்.

