இலங்கையில் இளையர்கள் வீழ்த்தத் திணறும் ‘திருடர் ஆட்சி’

போராடும் இளையர்களுக்கு ‘ஜென் ஸி’ முத்திரை தேவையில்லை என்கிறார்

இலங்கையில் இளையர்கள் வீழ்த்தத் திணறும் ‘திருடர் ஆட்சி’

3 mins read
ae224802-b03f-4e31-8d66-64c8c9dd2c4c
முகமூடிகளை மாற்றினாலும் போராட்டத்திற்கு முன்னதாகச் செயல்பட்ட தரப்புகள் இன்றும் தொடர்வதாக இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் அர்ஜுன பராக்ரம குறைகூறியுள்ளார். - படம்: செயற்கை நுண்ணறிவு

இலங்கையில் முழுமையான ஆட்சி மாற்றத்தையும் களங்கமற்ற அரசையும் பெறும் கனவுடன் வீதிகளில் இறங்கிய இளையர்கள், முடிவில் ஏமாற்றமடைந்துள்ளதாக 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய ஆய்வுக் கழக (ISAS) அனைத்துலக மாநாட்டின் பேராசிரியர் அர்ஜுன பராக்ரம தெரிவித்தார்.

இளையர்களின் கோணத்தில் இருந்து அணுகினால், அவர்கள் சந்தித்த மாபெரும் துரோகத்தின் வலியை முழுமையாக உணர முடியும். தங்களின் தியாகங்களாலும் போராட்டங்களாலும் கட்டமைப்பை மாற்றிவிட்டதாக இளையர்கள் நம்பினர் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைக்கான ஓய்வுபெற்ற கெளரவப் பேராசிரியர் பராக்ரம கூறினார்.

உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து செயல்பட்ட அரசாங்கத்தின் கீழ் அந்நாடு கட்டுப்பாடற்ற ஊழல் நிலையிலிருந்து எந்தவிதத் தடையுமற்ற முழுமையான ‘திருடர் ஆட்சியாக’ (Kleptocracy) உருமாறியதைச் சுட்டிய அவர், அதன் கடுந்தாக்கம் இன்றளவிலும் உணரப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தொடரும் அவல நிலை

அரசு நிறுவனங்களை முற்றிலுமாகத் தவறாகப் பயன்படுத்துவது, சமூக ஊடகங்களை ஆயுதமாக்குதல், மக்களை ஒடுக்குதல், ஒரு கட்சியின் ஆட்சியாக மாறுதல் உள்ளிட்ட திருடர் ஆட்சியின் பதினேழு கூறுகள் நாட்டில் செயல்படுவதையும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு அடையாளம் கண்டுள்ளதையும் அவர் சுட்டினார்.

‘அறகலய’ எனப்படும் மக்கள் போராட்டத்திற்காகத் தங்கள் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் இளையர்கள் தியாகம் செய்திருந்தனர். உண்மையான ஆட்சி மாற்றத்தை வழிநடத்துவதாக இளையர்கள் நம்பினர். ஆனால், அந்த மாற்றம் முற்றிலும் ஒப்பனை அளவிலானது என்றும் பேராசிரியர் பராக்ரம சாடினார்.

ஊழல் நிறைந்த நாடாளுமன்ற அமைப்பு அப்படியே இருக்க, தலைமையின் முகங்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன என்றார் பேராசிரியர் பராக்ரம.

“நடுத்தர, உயர் வகுப்பினரால் தந்திரமாகக் கையாளப்பட்டு நிதியளிக்கப்பட்ட இந்தப் போராட்டம், எரிவாயு மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற தங்களின் சொந்த உடனடிப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காகவே இளையர்களின் உழைப்பைப் பயன்படுத்திக் கொண்டது,” என்று அவர் கூறினார்.

மே 9-ஆம் தேதி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அரசாங்க வன்முறை இந்த முன்னேற்றத்தை வேண்டுமென்றே தடம்புரளச் செய்ததாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார். மலர்ந்து கொண்டிருந்த ஓர் ஒருங்கிணைந்த ஜனநாயக இயக்கத்திற்குப் பதிலாகக் கட்டுப்பாடற்ற குழப்பத்தை வன்முறைத் திட்டம் உருவாக்கி, அதிகாரத்தை மீண்டும் மேல்தட்டினரிடமே ஒப்படைத்தது என்று அவர் கூறினார்.

‘ஸி தலைமுறை’: முத்திரை தேவையில்லை

இந்த ஆழமான அரசியல் விழிப்புணர்வை வெறும் இசட் தலைமுறை (Gen Z) நிகழ்வாகத் தொடர்ந்து சித்தரிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்றது எனப் பேராசிரியர் பராக்ரம கூறுகிறார்.

“அரசியலில் ஈடுபாடு கொண்ட இளையர்களைப் பொறுத்தவரை, ஒரு மேற்கத்திய சந்தைப்படுத்தல் சொல்லுக்குள் தங்களை அடைப்பது ஒரு சிறுமைப்படுத்தும் செயலாகவும் அவமதிப்பாகவும் உணரப்படுகிறது,” என்றார் அவர்.

இத்தகைய தலைமுறை முத்திரைகள், முக்கியமான வேறுபாடுகளைத் திட்டமிட்டு மழுங்கடிப்பதுடன், அவர்களின் போராட்டத்தின் உண்மையான உந்துசக்திகளான வர்க்கம், பாலினம், புவிசார் அரசியல் மற்றும் சித்தாந்தம் ஆகியவற்றை மறைப்பதாகவும் பேராசிரியர் பராக்ரம கூறினார்.

இளையர்கள் வெறுமனே குறிப்பிட்ட தலைமுறையின் வயதுக் கோளாறால் போராடவில்லை; ஆழமாக வேரூன்றிய சமத்துவமற்ற அமைப்புக்கு எதிராகவே அவர்கள் போர்க்கொடி தூக்கினர் என்பது அவரது உறுதியான நிலைப்பாடு.

மறுபடியும் முதலுக்கே வந்துவிட்டது

புதிய காலகட்டம் பிறக்கும் என்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், அதே பழைய சிங்கள-பௌத்த மேலாதிக்க சித்தாந்தமே தங்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதையும், தங்களின் சக மனிதர்களை ஓரங்கட்டுவதையும் இளையர்கள் காண்பதாகவும் பேராசிரியர் பராக்ரம தெரிவித்தார்.

சிறுபான்மையினரின் பெருவாரியான ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், அரசியலமைப்புச் சபை, 23 உறுப்பினர்களைக் கொண்ட தொல்பொருள் ஆலோசனைக் குழு போன்ற முக்கியமான அமைப்புகளில் சிங்கள-பௌத்த ஆண்களை மட்டுமே நிரப்பியுள்ளது.

இந்த இனவாதக் கட்டமைப்பின் கொடூரம் இவ்வாண்டு ஜனவரியில் வீசிய ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியின் பாதிப்புகளில் மிகவும் வேதனையுடன் வெளிப்படுவதையும் அவர் காண்கிறார்.

“கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளிக்கூட முகாம்களில் சுமார் 60,000 மலையகத் தமிழர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களுக்குப் புரியாத மொழியிலேயே இழப்பீட்டுப் படிவங்கள் வழங்கப்படுகின்றன,” என அவர் சுட்டினார்.

நாடாளுமன்றத்தில் 159 உறுப்பினர்கள் என்ற ஆபத்தான மாபெரும் பெரும்பான்மையுடன் ஆளும் கட்சி ஓர் அதிகாரத்துவ சர்வாதிகாரமாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட பேராசிரியர், உடைந்த பாலத்தைச் சரிசெய்யக் கோரி மக்கள் அளிக்கும் மனுவைக் கூட கட்சியின் தலைமையகத்தின் அனுமதியின்றிச் செயல்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமே ‘கமிஷன்’களைக் கோரி, ஆக்கிரமித்துச் செழிக்கின்ற சூழலில், சில ஊழல்வாதிகளையும் தனிநபர்களையும் மட்டும் அகற்றுவது அர்த்தமற்றது என்றார் பேராசிரியர் பராக்ரம. “நாட்டின் அரசியல் பொருளாதாரத்தின் ஆணிவேரையும் அதன் அமைதியான அன்றாட ஊழல்களையும் குறிவைக்கும் ஒரு மாபெரும் அறிவுசார் மாற்றம் அவசியமாகிறது.”

குறிப்புச் சொற்கள்