தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில்’ நூற்றாண்டு கால வரலாறு

2 mins read
7ec2ea5c-3bbd-41de-800a-f4c0335e02a5
ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலின் தொடக்க காலத் தோற்றம். - படம்: செட்டியார் கோவில் குழுமம்

சிங்கப்பூரின் ஆகப் பழைய வட்டாரங்களுள் ஒன்றான சைனாடவுன் பகுதியில் தொடங்கி தற்போது கியோங் செய்க் சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் தனது நூற்றாண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

அதிகாபூர்வமாக 1925ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் குடமுழுக்கு நடைபெற்ற அக்கோவில் வரலாறு நீண்ட நெடியது.

காலனித்துவ ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர் படைச் சிப்பாயாகச் சிங்கப்பூருக்கு வந்த பொன்னம்பல சுவாமிகள் என்பவர் தாம் வழிபட ஒரு விநாயகர் சிலையைக் கையுடன் எடுத்து வந்தார். அதனைத் தினமும் வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த 1859களில், ஊட்ரம் பார்க் பகுதியில் இந்திய கிராமங்களில் காணப்படுவதுபோலவே மரத்தடியில் சிறு கூரை வேய்ந்த கோவிலாக இது தொடங்கப்பட்டது. ஊட்ரம் ரோடு சிறை ஊழியர்கள் அங்கிருந்த விநாயகர், நாகர் சிலைகளை வழிபட்டனர்.

தொடக்க கால வெள்ளிரதப் புறப்பாட்டுக் காட்சி.
தொடக்க கால வெள்ளிரதப் புறப்பாட்டுக் காட்சி. - படம்: தேசிய மரபுடைமைக் கழகம்

அப்பகுதியிலிருந்த ராணுவக் குடியிருப்புகளிலிருந்து அக்கோவிலை வந்தடைய வழியமைக்கப்பட்டது. குறிப்பாக ‘சிப்பாய் லைன்’ எனும் பகுதியில் அக்கோவில் அமைக்கப்பட்டதால், ‘லயன் சித்தி விநாயகர் கோயில்’ என்று பெயரிடப்பட்டது.

தொடர்ந்து அக்கோவில் உலோகக் கூரையுடன் சற்றே மேம்பாடு கண்டது. அச்சிலையை எடுத்துவந்த சிப்பாய் இந்தியாவிற்குத் திரும்பும் நிலை ஏற்பட்டதால், கோவிலைத் தொடர்ந்து பராமரிக்க நகரத்தாரின் ஆதரவை நாடினார்.

அவர்களது மேற்பார்வையில் கோவில் செயல்பட்டு வந்தபோது 1920களில் அவ்விடத்தில் பொது மருத்துவமனை வளாகம் விரிவாக்கம் பெற்றது. அதனால் தற்போதுள்ள இடத்தில் புதிய கோவில் எழுப்பப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேலும் இரு விநாயகர் சிலைகள் அக்கோவிலில் இணைந்தன.

அக்கோவில் கட்டப்பட்டபோது செப்பினாலான முருகன் வேல் ஒன்று வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அக்கோவிலில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பூச வெள்ளி ரத ஊர்வலத்தின்போது இப்போதும் அந்த வேல் அலங்கரிக்கப்பட்டு, அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

தைப்பூசத்துக்கு முந்தைய நாள் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலிருந்து முருகனின் உற்சவம் புறப்பட்டு ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலை வந்தடைவதும், மாலையில் அங்குள்ள வேலுடன் வெள்ளிரதத்தில் புறப்பட்டுக் காவடிகளுடன் செல்வதும் வழக்கமாக உள்ளது. இக்கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

வெள்ளி ரத ஊர்வலக் காட்சி.
வெள்ளி ரத ஊர்வலக் காட்சி. - படம்: செட்டியார் கோவில் குழுமம்

தொடர்ந்து 1975, 1989ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்றதுடன், 2007ஆம் ஆண்டு பெரிய அளவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நான்காவது குடமுழுக்கு நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு கோயிலில் புதுப்பிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்தாம் குடமுழுக்கு விழாவும் நடந்தது.

அக்கோவிலில் கண், காது, வாய், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளாலும் இறையை வழிபட வேண்டும் என்பதைக் குறிக்கும் நோக்கில் 40 அடி உயரம் கொண்ட ஐந்து அடுக்கு ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.

கோவிலைச் சுற்றி ஏழு உலோகக் கலசங்கள், பதினாறு செல்வங்களைக் குறிக்கும் விதமாகப் பதினாறு தூண்களும் அமைக்கப்பட்டது.

தற்போது பல்நோக்கு மண்டபம், இணைப்புக் கட்டடம், குளிர்சாதனம், மின்தூக்கி, ஒலி, ஒளி உள்ளிட்ட வசதிகளுடன் நவீனக் கோயிலாக அக்கோயில் செயல்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்