அனைத்துலகச் சந்தை விரிவாக்கம், தொழில்நுட்பப் பரிமாற்றம், முதலீட்டு ஒத்துழைப்பு, வர்த்தக வளர்ச்சி ஆகியவற்றின் தொடர்பில் சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழில் சம்மேளனத்துக்கும் (எஸ்எஸ்ஏசிசிஐ) சித்திரை வணிகக் கூட்டு நிறுவனங்களுக்கும் இடையே 19 புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாகியுள்ளன.
அனைத்துலக வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் இலக்குடன் சம்மேளனம், என்யுஎஸ்எஸ் சன்டெக் சிட்டி கில்ட் ஹவுசில் நடத்திய சிறப்பு வணிகச் சந்திப்பின் முக்கிய அம்சமாக அந்தப் புரிந்துணர்வுக் குறிப்புகள் அமைந்தன.
சிங்கப்பூர், இந்தியா, துபாய் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழில்முனைவர்கள், முதலீட்டாளர்கள், வணிக நிபுணர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சம்மேளனத்தின் தலைவர் சின்னு பழனிவேலு, 683 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியான் சந்தைக்குச் சிங்கப்பூர் எவ்வாறு சிறந்த நுழைவாயிலாகத் திகழ்கிறது என்பதை விவரித்தார்.
“இந்த நிகழ்வின் நோக்கம் சிங்கப்பூரின் வணிக வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவது மட்டுமன்று. சிங்கப்பூர், இந்தியா, துபாயைச் சேர்ந்த நிறுவனங்களை ஒன்றிணைத்து, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, நம்பகமான பங்காளித்துவங்களை வளர்த்து, அனைத்துலகச் சந்தைகளில் இணைந்து முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குவதும் ஆகும்”, என்றார் அவர்.
அரசியல் நிலைத்தன்மை, வெளிப்படையான சட்டதிட்டங்கள், எளிதான நிறுவனப் பதிவுமுறை, விரிவான இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தங்கள் முதலியவை சிங்கப்பூரில் வணிகம் செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய சாதகங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டன.
மேலும், தெற்காசிய வட்டாரத்தில் இரண்டு பில்லியன் மக்கள் வசிப்பதையும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆறு டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த என்பதையும் டாக்டர் சின்னு பழனிவேலு குறிப்பிட்டார். சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இந்தச் சந்தைகளில் நிறுவனங்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் பற்றி அவர் விளக்கினார்.
புதிய தொழில் நிறுவனத்தை அமைத்தல், வங்கிக் கணக்கைத் தொடங்குதல், வருமான வரிப் படிவங்களைச் சமர்ப்பித்தல் போன்றவை குறித்த நடைமுறை வழிகாட்டுதல்களும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
நிலையான பொருளியல் வளர்ச்சிக்கு மக்களுக்கு இடையில் வலுவான தொடர்பும் வட்டார வணிகப் பங்காளித்துவங்களுமே அடிப்படை என்பதைச் சம்மேளனம் வலியுறுத்தியது. உலகளாவிய நிறுவனங்களை இணைக்கும் இலக்கைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் அது தெரிவித்தது.


