அறிவியல், தொழில்நுட்பப் பள்ளியின் (எஸ்எஸ்டி) மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் இப்போது தங்கள் வளாகத்திலிருந்தே விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளவும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கவும் முடியும்.
திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 20) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட, அப்பள்ளியின் புதிய விண்வெளி தொழில்நுட்ப மையம், அதன் புதிய ஆய்வகத்தில் 17 அங்குல ‘பிளேன்வேவ்’ தொலைநோக்கி மற்றும் ஒரு ‘டகாஹாஷி’ ஒளிவிலகல் தொலைநோக்கி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்தக் கருவிகள் சூரியன், கோள்கள் மற்றும் ஆழ்விண்வெளி ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், நிலவின் பள்ளங்கள், சனிக்கோளின் வளையங்கள் உட்பட அண்டத்தை ஆராய மாணவர்களுக்கு இவை உதவுகின்றன.
புதிய தொலைநோக்கி, எஸ்எஸ்டி மாணவர்கள் தற்போது பயன்படுத்தும் உபகரணங்களில் ஒன்றான சாதாரண கையடக்க இருகண் நோக்கிகளை விட மிகவும் பெரியது. இது உயர் தெளிவுத்திறன் மற்றும் உருப்பெருக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும் அதன் மிகப்பெரிய துளை காரணமாக அதிக ஒளியைச் சேகரிக்க முடியும்.
‘பெல் ரேடியோ’ அறையில், மாணவர்கள் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கவும், உலகெங்கிலும் உள்ள மற்ற வானொலி பயனர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும். இது ஒரு தொழில்முறையற்ற வானொலி நிலையமாகச் செயல்படுகிறது. மேலும் மாணவர்கள் தங்கள் சொந்த செய்திகளை அனுப்பவும், விண்வெளியிலிருந்து வரும் சமிக்ஞைகளைக் கேட்கவும் ‘டிரான்ஸ்சீவர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் வானியல் ஆய்வகம் கொண்ட இரண்டு மேல்நிலைப் பள்ளிகளில் எஸ்எஸ்டியும் ஒன்றாகும். மற்றொன்று என்யுஎஸ் கணிதம், அறிவியல் உயர்நிலைப் பள்ளி. மேலும் பிரத்தியேக தொழில்முறையற்ற வானொலி நிலையத்தைக் கொண்ட ஒரே பள்ளியும் இதுவே ஆகும்.
இந்த மையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்த கல்விக்கான மூத்த துணை அமைச்சர் டேவிட் நியோ, இது வகுப்பறை அறிவை நிதர்சன உலகப் பயன்பாட்டுடன் இணைக்கிறது என்றும் சிங்கப்பூரின் புத்தாக்கம், ஆராய்ச்சி மைய நிலையை வலுப்படுத்த திறமைகளை வளர்க்கும் என்றும் கூறினார்.
விண்வெளித் தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சி, ஏவுதல் செலவுகள் குறைந்ததன் காரணமாக, விண்வெளி என்பது நாடுகளுக்கும் வணிகங்களுக்கும் எளிதில் அணுகக்கூடிய ஒரு களமாக மாறியுள்ளது என்று திரு நியோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“பல ஆண்டுகளாகச் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் எங்களின் வலுவான ‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் அடித்தளங்கள் காரணமாக, இந்த உலகளாவிய வேகத்தைப் பயன்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் சிறந்த நிலையில் உள்ளது,” என்றும் அவர் மேலும் கூறினார்.


