2025ஆம் ஆண்டில் எஸ்டி என்ஜினியரிங் (ST Engineering) சாதனை அளவாக $18.7 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற்றது.
இதற்கு முன்னர் 2024ஆம் ஆண்டில் அந்நிறுவனம் $12.6 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற்றது.
இந்தத் தகவலை அந்நிறுவனம் புதன்கிழமை (ஜனவரி 28) வெளியிட்டது.
2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் புதிதாக 4.7 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தப் புள்ளிகளை எஸ்டி என்ஜினியரிங் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
நான்காவது காலாண்டில், தற்காப்பு, பொதுத்துறை உள்ளிட்ட மூன்று முக்கியத் துறைகளின்கீழ் ஒப்பந்தப் புள்ளிகள் கிடைத்தாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு மட்டும் 2.5 பில்லியன் வெள்ளி.
தற்காப்பு அமைச்சுக்காக அடுத்த தலைமுறைப் போர் வாகனங்கள், உள்துறை அமைச்சுக்காகச் சிங்கப்பூர் சிறைச் சேவைக்கான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், இணையப் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தப் புள்ளிகள் எஸ்டி என்ஜினியரிங்கிற்குக் கிடைத்துள்ளன.
வர்த்தக ரீதியான விமானத்துறை தொடர்பாக $1.7 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகள் கிடைத்துள்ளன.
ஒப்பந்தப் புள்ளிகள் சார்ந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பங்குச் சந்தையில் எஸ்டி என்ஜினியரிங்கின் பங்கு விலை 9 காசு கூடியது. புதன்கிழமை காலை 9.15 மணி நிலவரப்படி ஒரு பங்கின் விலை $9.53 ஆக இருந்தது.

