புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் ஆராதனையின்போது தாக்கப்பட்ட அருட்தந்தை கிறிஸ்டஃபர் லீ, மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பியுள்ளார்.
சிங்கப்பூரின் ரோமன் கத்தோலிக்கப் பேராயம் நவம்பர் 15 அன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தவத்திரு லீ மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பிய பிறகு மருத்துவ விடுப்பில் இருப்பார் என்று கூறியது.
அந்த அறிக்கையில் அருட்தந்தை லீ, “செயின்ட் ஜோசஃப் தேவாலயத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள கத்தோலிக்க சமூகத்தின் அமோக அன்பு மற்றும் ஆதரவிற்கு நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் குணமடையும் போது உங்களின் பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துகளும் பலத்தையும் ஆறுதலையும் அளித்தன,” என்று கூறியிருந்தார்.
57 வயதான பாதிரியார் நவம்பர் 9ஆம் தேதி மாலை ஆராதனையை கொண்டாடியபோது கத்தியால் குத்தப்பட்டார்.
தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 37 வயது பஸ்நாயக கீத் ஸ்பென்சர் மீது, ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக நவம்பர் 11 அன்று குற்றம் சுமத்தப்பட்டது. அவரது வழக்கு டிசம்பர் 2ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பதிவில், நவம்பர் 11ஆம் தேதி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அருட்தந்தை லீயை சந்தித்ததாகக் கூறினார்.
“அவர் விழிப்பு நிலையில் இருந்தார். வாயில் பலத்த காயங்கள் இருந்தபோதிலும் தெளிவாகப் பேசினார். நாம் அனைவரும் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்,” என்றார் டாக்டர் விவியன்.