எதிர்வரும் பொதுத்தேர்தலில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, தெம்பனிஸ் குழுத்தொகுதியிலும் செம்பவாங் குழுத்தொகுதியிலும் போட்டியிடுவதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) அறிவித்தது.
இதனால் அந்த இரண்டு குழுத்தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி இடம்பெறுகிறது.
ஏற்கெனவே, செம்பவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்தன.
அதேபோல் தெம்பனிஸ் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் போட்டியிடவுள்ளன.
செம்பவாங் குழுத்தொகுதியில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் தலைமைச் செயலாளர் ஸ்பென்சர் இங், 45, தலைமையில் அக்கட்சி களமிறங்குகிறது.
அத்தொகுதியில் 2015, 2020 பொதுத்தேர்தல்களில் ஸ்பென்சர் இங் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி போட்டியிட்டது.
இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த முழுவிவரங்கள் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் கம்பொங் அட்மிரல்ட்டியில் தொகுதி உலா சென்றபோது அக்கட்சிக்காகக் களமிறங்கும் இரண்டு புதுமுகங்களை அறிமுகம் செய்தார் திரு இங்.
தொடர்புடைய செய்திகள்
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் விரிவுரையாளர் வெரினா ஓங், 46, மற்றும் நிதி ஆலோசகர் சி பே, 32, ஆகியோரே அவர்கள்.
இதற்கிடையே, புதிதாக உருவாக்கப்பட்ட செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் போட்டியிடவில்லை என்று திரு இங் தெரிவித்தார்.
இதனால் அத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் மோதுகின்றன.
மேலும் தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதி, ஜாலான் புசார் குழுத்தொகுதி, மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதி ஆகியவற்றிலும் போட்டியிடவில்லை என்று திரு இங் தெரிவித்தார்.

