சிங்கப்பூரில் மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகளின் விற்பனையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகச் சொத்துச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். விற்பனைக்கு விடப்படும் அத்தகைய வீடுகள், சொத்துச் சந்தைப் பட்டியலில் நீண்டகாலம் தேங்கிவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
வீடுகளை வாங்க விரும்புவோர் அவற்றைத் தெரிவுசெய்ய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதாலும் விற்பனையாளர்கள் வீட்டின் விலையைக் குறைக்க மறுப்பதாலும் அந்த நிலை நீடிப்பதாக அவர்கள் கூறினர்.
கொவிட்-19 காலகட்டத்திற்குப்பின் ஒப்புநோக்க, மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகள், கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூடுதல் காலம் விற்பனைப் பட்டியலில் தேங்கியிருப்பதைப் பிராப்பர்ட்டிகுரு, 99.கோ ஆகியவற்றின் தரவுகள் மூலம் காண முடிகிறது.
2022ஆம் ஆண்டில் விற்பனைக்கு விடப்பட்ட மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகள், ஏறக்குறைய 45 நாள்கள் பிராப்பர்ட்டிகுருவின் பட்டியலில் தேங்கியிருந்தன. 2023ஆம் ஆண்டில் அது 39 நாள்களாகக் குறைந்தது.
ஆனால், மே 18ஆம் தேதி நிலவரப்படி, இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் விற்பனைக்கு விடப்பட்ட மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகள் சராசரியாக 81 நாள்களுக்குப் பட்டியலில் தேங்கின.
அதேபோல 99.கோ தளத்தில் இருந்த மறுவிற்பனை வீடுகள், இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் கிட்டத்தட்ட 106 நாள்களுக்கு விற்பனையாகாமல் இருந்தன.
மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகள் நீண்டகாலம் பட்டியலில் இருப்பதால் வாங்குவோருக்குக் கூடுதல் தெரிவுகளும் கால அவகாசமும் கிடைப்பதாக வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.
சொத்துச் சந்தை தற்போது வாங்குவோருக்குச் சாதகமாக மாறியுள்ளது என்று அவர்கள் சுட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய போக்கு சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. மத்திய வட்டாரத்தின் மையப் பகுதி, மத்திய வட்டாரத்தைச் சுற்றியுள்ள பிற பகுதிகள், மத்திய வட்டாரத்துக்கு வெளியே உள்ள பகுதிகள் என அனைத்திலும் ஒரே நிலைதான்.
பல்வேறு மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகளின் விலையும் சந்தை விலையைவிட அதிகமாக இருப்பதாக வாங்குவோர் சிலர் கூறினர்.
சில விற்பனையாளர்கள் தங்கள் வீடுகளுக்கான விலையைக் குறைக்க விரும்பவில்லை. அத்துடன், விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அதே வீட்டில் கூடுதல் மாதங்கள் தங்கியிருக்க அனுமதிக்கும்படியும் அவர்கள் கோருகின்றனர்.
அவ்வாறு செய்ய அனுமதிக்கும்போது வீட்டை வாங்குபவர் தற்போது இருக்கும் வீட்டில் கூடுதல் காலம் தங்கியிருப்பதற்கு அதை விற்றவரிடம் கேட்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்.
இத்தகைய சூழலால் பலர் வீடுகளை வாங்க கூடுதல் காலம் எடுத்துக்கொள்வதாகவும் வல்லுநர்கள் சுட்டினர்.
கடந்த ஆண்டு ஜூலையிலிருந்து செப்டம்பருக்கு இடைப்பட்ட காலகட்டத்துக்குப்பின், மறுவிற்பனை கூட்டுரிமை வீடுகளின் விற்பனை, இரண்டு காலாண்டுகளாகத் தொடர்ந்து சரிவைக் கண்டுள்ளது.

