தனியார் வீட்டை வாங்கி நான்கு ஆண்டுகள் ஆகாத நிலையில் அதை விற்பவர்கள் 4 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடு வரையிலான சொத்து விற்போர் முத்திரை வரியைச் செலுத்த வேண்டும். இப்பிரிவினருக்கான முத்திரை வரி வெள்ளிக்கிழமையிலிருந்து (ஜூலை 4) உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய வளர்ச்சி அமைச்சும் நிதி அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வியாழக்கிழமை (ஜூலை 3) இரவு அறிக்கை வெளியிட்டன.
இதற்கு முன்பு, தனியார் வீட்டை வாங்கி மூன்று ஆண்டுகள் ஆகாத நிலையில் அதை விற்பனை செய்தால் 4 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடு வரையிலான முத்திரை வரி செலுத்த வேண்டி இருந்தது.
தனியார் வீடு வாங்கிய பிறகு குறுகிய காலத்திலேயே அதை விற்கும் முறை அண்மைய ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்திருப்பதை அதிகாரிகள் சுட்டினர்.
குறிப்பாக, புதிதாகக் கட்டப்படும் தனியார் வீடுகளை வாங்கி அவை முழுமை அடைவதற்கு முன்பே அதை விற்பனை செய்யும் முறை அதிகளவில் ஏற்றம் கண்டுள்ளது.
சொத்து விற்போருக்கான முத்திரை வரி 2010ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தனியார் வீடுகளை வாங்கி, அதைக் குறுகிய காலத்திலேயே விற்று லாபம் ஈட்டும் முறையைத் தடுக்க முத்திரை வரி அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
தனியார் வீடுகளைக் குறிவைத்து இந்த அணுகுமுறை நடப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சொத்து முத்திரை வரி, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டு உரிமையாளர்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால், வீவக வீட்டை வாங்கிய பிறகு, குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆன பிறகே அதை விற்பனை செய்ய முடியும்.
தொடர்புடைய செய்திகள்
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இரண்டாவது அல்லது அதற்கும் கூடுதலான வீடுகளை வாங்கும் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்குமான கூடுதல் முத்திரை வரி உயர்த்தப்பட்டது.