சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் நிறுவனம் பலரை ஆட்குறைப்பு செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூரில் பணியாற்றிய 80 ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவ்வங்கியின் தொழில்நுட்ப, செயல்பாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது.
ஆட்குறைப்பு செய்யப்பட்டோரின் பணிகள் இந்தியாவில் இருப்போரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நிதி வேலை வாய்ப்புத் தளமான இஃபைனான்ஷியல்கரியர்ஸ் (efinancialcareers) தெரிவித்துள்ளது. லண்டனில் இயங்கும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டின் சிங்கப்பூர் பிரிவுகளில் வேலைகள் ‘மறைந்துவருவதாக’ தகவல் தெரிந்தவர்கள் கூறியதாக இஃபைனான்ஷியல்கரியர்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டது.
ஆசிய, மத்திய கிழக்கு வட்டாரங்களில்தான் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆக அதிகமாகப் பணம் ஈட்டுகிறது. நிறுவனச் செயல்பாட்டுக்கான செலவை மிச்சப்படுத்தும் திட்டத்தை அந்த வங்கி செயல்படுத்திவருகிறது.
‘ஃபிட் ஃபோர் குரோத்’ என்றழைக்கப்படும் அத்திட்டத்தின்கீழ் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பங்குதாரர்களிடம் மேலும் 1.5 பில்லியன் டாலர் (இரண்டு பில்லியன் வெள்ளி) திருப்பித்தரும். அவ்வங்கியின் சென்ற ஆண்டு நான்காம் காலாண்டு வருவாய் கணிக்கப்பட்டதைவிட அதிகமாகப் பதிவானது.
முன்னதாக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் அதன் சிங்கப்பூர், லண்டன், ஹாங்காங் கிளைகளில் சுமார் 100 பேரை ஆட்குறைப்பு செய்தது. ஆண்டு முழுவதும் ஒரு பில்லியன் டாலருக்கும் (1.35 பில்லியன் வெள்ளி) அதிகமான செலவைக் குறைக்கத் திட்டமிட்டிருந்தது.

