சிங்கப்பூரின் 60வது ஆண்டுநிறைவை முன்னிட்டு இந்த ஆண்டின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டம் பாடாங்கில் நிறைவுபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அது பாடாங்கில் நிறைவுபெறுவது இதுவே முதன்முறையாக இருக்கும்.
டிசம்பர் 6, 7ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த உலகத் திடல்தடத் தங்க முத்திரை ஓட்டம் ‘எஃப்1 பிட்’ கட்டடத்தில் தொடங்கி பாடாங்கில் நிறைவுபெறும்.
1945ல் ஜப்பானியர் சரணடைந்தபோது வெற்றி அணிவகுப்பு, 1959ல் யூசோஃப் இஷாக் சிங்கப்பூரின் முதலாவது நாட்டுத் தலைவராகப் பதவியேற்றது, 1963ல் சிங்கப்பூர்- மலேசியா இணைப்பு குறித்து முன்னாள் பிரதமர் அமரர் லீ குவான் யூவின் அறிவிப்பு, 1966ல் சிங்கப்பூரின் முதல் தேசிய தின அணிவகுப்பு உள்ளிட்ட முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பாடாங்கில் நடைபெற்றன.
சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம் (முன்னாள் நகர மண்டபம், உச்ச நீதிமன்றம்), இரண்டாம் உலகப் போர் நினைவுச்சின்னம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மற்ற இடங்களும் பாடாங் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளன.
அதனால், சிங்கப்பூர் கடந்து வந்த 60 ஆண்டுப் பயணத்தை நினைவுகூர்ந்தபடியே பங்கேற்பாளர்களின் ஓட்டப் பயணம் அமையும். மரினா பே சேண்ட்ஸ், கரையோரப் பூந்தோட்டம் போன்ற அழகிய காட்சிகளும் அவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும்.
இவ்வாண்டு முதன்முறையாக அரை நெடுந்தொலைவோட்டமும் முழு நெடுந்தொலைவோட்டமும் வெவ்வேறு நாள்களில் இடம்பெறுகின்றன.
டிசம்பர் 6ஆம் தேதி அரை நெடுந்தொலைவோட்டம் அதிகாலை 4.30 மணிக்கும், 5 கிலோமீட்டர் ஓட்டம் காலை 6.30 மணிக்கும், சிறுவர் ஓட்டம் காலை 9 மணிக்கும் தொடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
டிசம்பர் 7ஆம் தேதி நெடுந்தொலைவோட்டமும் ‘எகிடன்’ குழுவோட்டமும் அதிகாலை 4.30 மணிக்கும், 10 கிலோமீட்டர் ஓட்டம் காலை 6.30 மணிக்கும் தொடங்கும்.
தேசிய தினத்தன்று ‘எகிடன்’ குழுவோட்டத்துக்குப் பதிவுசெய்யும் முதல் 60 அணிகளுக்கு $60 தள்ளுபடி வழங்கப்படும். அவர்கள் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி அட்டை வைத்திருப்பவர்களாக இருந்தால் கூடுதலாக 15% தள்ளுபடியும் வழங்கப்படும். மற்ற ஓட்டப் பிரிவுகளுக்கான ‘எஸ்ஜி60’ சலுகைகள் இனி அறிவிக்கப்படும்.