ஏ-ஸ்டார் எனப்படும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, மனநலம் மீது நகர்ப்புறச் சூழல் கொண்டுள்ள தாக்கத்தை ஆராயவிருப்பதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியிருக்கிறார்.
நகர்ப்புற வடிவமைப்பு அம்சங்கள், மனித நடத்தை போன்றவை ஆய்வு செய்யப்படும் என்று திரு ஹெங் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் சன்டெக் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற ‘உலக நகரங்கள் மாநாடு 2024’ல் அவர் பேசினார்.
தேசிய ஆராய்ச்சி அறநிறுவனத்தின் தலைவருமான திரு ஹெங், ஆய்வின் கண்டுபிடிப்புகள் நாம் நமது நாட்டை மீண்டும் புதுப்பித்து, வடிவமைக்கும் முறையை மேம்படுத்தும் என்று கூறினார்.
ஒரு மில்லியன் வெள்ளி செலவிலான அந்த ஏ-ஸ்டார் ஆய்வை மேற்கொள்ள, நகர மறுசீரமைப்பு ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் அழைப்பு விடுத்தன.
அரசாங்கத்தின் $28 பில்லியன் பெறுமானமுள்ள ‘ஆய்வு, புத்தாக்க, தொழில்முனைப்பு 2025’ திட்டம், அதற்கு நிதி வழங்கும்.
அந்த ஐந்தாண்டுத் திட்டம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
மனநல ஆய்வு இவ்வாண்டு மே மாதம் ஏ-ஸ்டார் அமைப்பிடம் வழங்கப்பட்டது. அந்த அமைப்பின் சிங்கப்பூர் மருத்துவ அறிவியல் கழகம் ஆய்வை மேற்கொள்ளும்.
தொடர்புடைய செய்திகள்
பொதுவான மக்கள்தொகையின் மனநலத்தை எவ்வாறு கட்டடச் சூழலின் வெவ்வேறு அம்சங்கள் பாதிக்கின்றன என்பதை மதிப்பிட, அந்த ஆய்வில் தரவு சார்ந்த முறை பயன்படுத்தப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு கூறியது.
சிங்கப்பூரில் பரவலாகக் காணப்படும் கட்டடச் சூழலை எடுத்துக்கொண்டால், இங்கு மனநல ஆய்வை மேற்கொள்ள தனித்துவமான வாய்ப்பு உள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
உள்ளூரில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு, உடல்நலம் மீது கட்டடச் சூழல் கொண்டுள்ள தாக்கத்திலும், மனநலம் மீதான பசுமை அம்சங்களின் நன்மைகளிலும் முக்கியக் கவனம் செலுத்தியுள்ளது.
கட்டடச் சூழலின் மற்ற அம்சங்களையும், மனநலம் மீதான அவற்றின் தாக்கத்தையும் மேலும் முழுமையாக ஆராய்ந்து இந்தத் திட்டம் அந்தக் கண்டுபிடிப்புகளை விரிவுபடுத்த நோக்கம் கொண்டுள்ளது.


