மைரிபப்ளிக் இணைய வர்த்தகத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கியுள்ளதாக ஸ்டார்ஹப் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது.
மைரிபப்ளிக் இணைய வர்த்தகத்தின் எஞ்சியுள்ள 49.9 விழுக்காட்டுப் பங்குடன், அதன் முக்கிய செயல்பாட்டுச் சொத்துகளையும் சிங்கப்பூரில் உள்ள அதன் வர்த்தகப் பெயரையும் ஸ்டார்ஹப் வாங்கியது.
இணைய வர்த்தகத்தின் பங்கை விற்றதை அடுத்து மைரிபப்ளிக் நிறுவனம் தற்போது மெய்நிகர் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமாக உள்ளது.
ஸ்டார்ஹப் ஏற்கெனவே மைரிபப்ளிக் நிறுவனத்தின் இணைய வர்த்தகத்தில் 50.1 விழுக்காட்டுப் பங்கை 2022ஆம் ஆண்டிலிருந்து கட்டுப்படுத்திவந்தது.
தற்போது எஞ்சியுள்ள 49.9 விழுக்காட்டுப் பங்கை $94.3 மில்லியனுக்கும் சொத்துகளையும் வர்த்தகப் பெயரையும் $10.8 மில்லியனுக்கும் அதிகமான தொகையையும் கொடுத்து ஸ்டார்ஹப் வாங்கியுள்ளது.
எனினும் ஸ்டார்ஹப் மைரிபப்ளிக்கிற்கு இதற்குமுன் கொடுத்த $74.2 மில்லியன் கடன் $94.3 மில்லியன் தொகையில் இருந்து கழிக்கப்படும்.
மிச்சமுள்ள $31 மில்லியன் தொகையை ஸ்டார்ஹப் தவணை முறையில் செலுத்தும்.
எம்ஒன் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வர்த்தகத்தை சிம்பா டெல்காம் நிறுவனம் வாங்கியதைத் தொடந்து ஸ்டார்ஹப்பின் அதன் ஒப்பந்தம் குறித்து அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மைரிபப்ளிக்கை வாங்கியது குறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டார்ஹப், “சிங்கப்பூர் இணையச் சந்தையில் உள்ள தனது பல வர்த்தகப் பெயர்களையும் பல பிரிவுகளையும் இது வலுப்படுத்தும்,” என்றது.
ஸ்டார்ஹப் நிறுவனத் தலைமை நிர்வாகி நிக்கில் ஏப்பான், “சந்தைகள் மாறுவதால் அளவு, தரம், மீள்திறன் ஆகியவை முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது முக்கியமாக உள்ளன. சிறிய வர்த்தகங்கள் தாக்குப்பிடிக்க சிரமப்படலாம்,” என்றார்.
நம்பகத்தன்மை, செயல்திறன், நிலைத்தன்மை ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்குத் தேவையான நேரத்தில் வழங்குவதே தங்கள் கடமை என்று திரு நிக்கில் கூறினார்.
இவ்வாண்டின் முதலாம் காலாண்டு நிலவரப்படி, ஸ்டார்ஹப் தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் இணைய வசதிகளை பயன்படுத்தும் 577,000 சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.