ஸ்டார்ஹப் தொலைத்தொடர்பு நிறுவனம் இவ்வாண்டின் முதல் பாதியில் தனது லாபம் 41.7 விழுக்காடு சரிந்துவிட்டதாகத் தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான அரையாண்டில் ஸ்டார்ஹப் $82.1 மில்லியன் லாபம் ஈட்டியது. இவ்வாண்டு ஜூன் வரையிலான அரையாண்டில் அது $47.9 மில்லியனாகக் குறைந்துவிட்டது.
இருப்பினும் வருவாய் அதிகரித்து உள்ளதாக ஸ்டார்ஹப் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) கூறியது.
விரிவலைச் சேவை உள்ளிட்ட சில அம்சங்களில் முன்னேற்றம் காணப்பட்டதால் கடந்த ஆண்டைக் காட்டிலும் வருவாய் 2.2 விழுக்காடு அதிகரித்து $1.13 பில்லியனாகப் பதிவானது என்று அது தெரிவித்துள்ளது.
விரிவலை, வட்டார வர்த்தகம், இணையப் பாதுகாப்புச் சேவைகள் போன்றவை வருவாய் உயர்வுக்குக் கைகொடுத்தன.
இவற்றில், இணையப் பாதுகாப்புச் சேவைகளில் மட்டும் 20.1 விழுக்காடு வருவாய் அதிகரித்தது.
மைரிபப்ளிக் நிறுவனத்தின் விரிவலை வர்த்தகத்தை வாங்கப்போவதாக ஆகஸ்ட் 12ஆம் தேதி ஸ்டார்ஹப் தெரிவித்து இருந்தது.