எம்1 நிறுவனத்துடன் இணையும் ஸ்டார்ஹப்

எம்1 நிறுவனத்துடன் இணையும் ஸ்டார்ஹப்

சர்க்கிள்ஸ் லைஃப் நிறுவனத்தையும் கையகப்படுத்துகிறது
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Nov 2026 - 12:48 pm

2 mins read

எம்1 நிறுவனத்துடன் இணையவிருப்பதாக ஸ்டார்ஹப் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) அறிவித்துள்ளது.

$1.1 பில்லியன் மதிப்புள்ள இந்த இணைப்பு, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பிறகு 2027 முற்பாதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரை வாடிக்கையாளர்களின் தற்போதைய திட்டங்களும் சேவைகளும் தொடரும். இரு நிறுவனங்களும் தனித்தனியாகப் போட்டியிட்டுச் செயல்படும்.

முன்னதாக, சிம்பா நிறுவனத்துடனான $1.4 பில்லியன் இணைப்பு முயற்சி மே மாதம் நிறைவேறாததைத் தொடர்ந்து, எம்1 நிறுவனத்தின் மூல நிறுவனமான கெப்பல் புதிய வாங்குநரைத் தேடி வந்தது. ஒழுங்குமுறை விதிமீறல்கள் காரணமாக சிம்பா மீதான விசாரணையை ஆணையம் தொடங்கியதால் அந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, சர்க்கிள்ஸ் லைஃப் நிறுவனத்தின் சிங்கப்பூர்ச் செயல்பாடுகளைக் கையகப்படுத்தும் விருப்புரிமையைப் பயன்படுத்தியுள்ளதாக சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் ஸ்டார்ஹப் அறிவித்தது. அறிவிப்புக்கு முன்னதாக ஸ்டார்ஹப், கெப்பல் நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த இணைப்பின்மூலம் கைப்பேசி, அகண்ட அலைவரிசை, நிறுவனத் திறன்களைக் கொண்ட 4.1 மில்லியன் வாடிக்கையாளர்கள் அடங்கிய குழுமம் அமையும். சிங்கப்பூரில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாகக் குறையும். சிங்டெலும் சிம்பாவும் மற்ற இரு நிறுவனங்களாகும்.

சிங்கப்பூருக்குத் தேவைப்படும் அடுத்தகட்ட உள்கட்டமைப்பை வழங்க நிறுவனங்களின் ஒருங்கிணைப்பே தீர்வாகும் என்று ஸ்டார்ஹப் தலைமை நிர்வாக அதிகாரி நிகில் ஈப்பன் கூறினார்.

இந்த முழுப் பங்கு ஒப்பந்தத்தின்கீழ், எம்1 பங்குதாரர்களுக்கு 651.7 மில்லியன் புதிய பங்குகளை ஸ்டார்ஹப் வழங்கும். இது, ஸ்டார்ஹப்பின் விரிவாக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் 27.4 விழுக்காடாகும்.

இதில் கெப்பல் 23.0 விழுக்காட்டுப் பங்குகளையும் எம்1 நிறுவனத்தின் பிற பங்குதாரர்கள் 4.4 விழுக்காட்டுப் பங்குகளையும் வைத்திருப்பர். எம்1 நிறுவனம் $380 மில்லியன் நிகரக் கடனுடன் விற்கப்படும்.

இவ்விணைப்புக்கு இரு நிறுவனங்களின் சிறப்புப் பொதுக் கூட்டங்களில் பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், முதன்மைப் பங்குதாரர்களான ஏஷியா மொபைல் ஹோல்டிங்சும் தெமாசெக்கும் வாக்களிப்பதைத் தவிர்க்கும். ஒப்பந்தம் நிறைவடைந்ததும் $324 மில்லியன் நிகரக் கடனுடன் எம்1 நிறுவனத்தைத் தனது கணக்கிலிருந்து கெப்பல் பிரிக்கும்.

இந்நிலையில், ஸ்டார்ஹப், எம்1 இரண்டு நிறுவனங்களும் வழங்கும் கைப்பேசித் திட்டங்களின் கட்டணங்களில் 2027ல் எவ்வித மாற்றமும் இருக்காது. ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பிறகு அவற்றுக்கு இடையிலான இணைப்பு முழுமையடையும் வரை தற்போதைய கட்டணங்களே நீடிக்கும்.

குறிப்புச் சொற்கள்